2016-06-22 15:37:00

மரண தண்டனை ஏற்க முடியாதது, இறைத்திட்டத்திற்கு முரணானது


ஜூன்,22,2016. குற்றம் எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், மரண தண்டனை ஏற்க முடியாதது, ஏனென்றால், இது மனித வாழ்வின் புனிதம் மற்றும் மனிதரின் மாண்பைப் புண்படுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நார்வே நாட்டு ஆஸ்லோவில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள, மரண தண்டனையை எதிர்க்கும் ஆறாவது உலக கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுடன், அதே நாள் மாலையில், காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை, மரண தண்டனைக்கு எதிரான தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

கடவுள், மனித சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமென வைத்துள்ள திட்டத்திற்கு இது முரணானது மற்றும் இது நீதியைக் கொண்டு வராது என்றும் கூறிய திருத்தந்தை,  மரண தண்டனை, பழிவாங்கும் உணர்வை ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

கொலை செய்யாதே என்ற கடவுளின் கட்டளை, முழுமையான மதிப்பைக் கொண்டிருக்கின்றது மற்றும், இக்கட்டளை, அப்பாவிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வும், மாண்பும் மதிக்கப்படுவதை, உலகெங்கும் மிகச் சிறப்பாக ஊக்குவிப்பதற்கு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறிய திருத்தந்தை, கடவுளால் வழங்கப்பட்ட தவிர்க்க இயலாத வாழ்வதற்கான உரிமை, குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்பது மறக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.

ஜூன் 21, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள, இந்த உலக கருத்தரங்கு, இவ்வியாழனன்று நிறைவடையும். இதில், அரசு அதிகாரிகள் உட்பட, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,300க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.