2016-06-22 15:50:00

துன்ப வரலாற்றைக் கொண்ட அர்மேனியர்களுடன் ஒருமைப்பாடு


ஜூன்,22,2016. “கிறிஸ்தவராய் இருப்பது என்பது, ஒருவர் தனது சொந்த வாழ்வில், அதன் எல்லாக் கூறுகளிலும், இயேசுவோடும், அவர் வழியாக இறைத்தந்தையோடும் இணைந்திருப்பாகும்”என்ற வார்த்தைகள், இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், திருத்தந்தையின் அர்மேனிய நாட்டுத் திருத்தூதுப் பயணம், நீண்ட காலம் துன்பம் அனுபவித்த வரலாற்றைக் கொண்டிருக்கும் அர்மேனியருடன் திருத்தந்தை தனது அன்பையும், தோழமையுணர்வையும் தெரிவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று, இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இவ்வெள்ளியன்று(ஜூன்,24-26) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அர்மேனிய நாட்டுக்கான மூன்று நாள் திருத்தூதுப் பயணம் பற்றி இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

அமைதிக்காக ஏங்கும் அர்மேனியர்களின் ஆவலைப் பகிர்ந்து கொள்ளவும் திருத்தந்தை அந்நாட்டிற்குச் செல்கிறார் என்றுரைத்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், 2016ம் ஆண்டில் Caucus பகுதியிலுள்ள மூன்று நாடுகளுக்குத் திருத்தந்தை செல்வதன் முதல் பகுதியாக, அர்மேனிய திருத்தூதுப் பயணம் நோக்கப்பட வேண்டும் என்றார்.

இப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக, வருகிற செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, திருத்தந்தை, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியாவுக்குச் செல்வார் என்றும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

அர்மேனியாவில் 33 இலட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், அர்மேனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கோடிப் பேர், அந்நாட்டிற்கு வெளியே, பெரும்பாலும் இரஷ்யாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வாழ்கின்றனர். அர்மேனியாவின் மொத்த மக்களில் ஒன்பது விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கத்தோலிக்கர்.

திருத்தந்தையின் அர்மேனியப் பயணத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முக்கிய அங்கம் வகிக்கும் எனவும், 1915ம் ஆண்டில், ஒட்டமான் படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் வாரிசுகளைத் திருத்தந்தை சந்திப்பார் மற்றும், அந்த நினைவிடத்திற்கும் திருத்தந்தை செல்வார் என்றார் அருள்பணி லொம்பார்தி.

இப்பயணம், திருத்தந்தையின் 14வது வெளிநாட்டுப் பயணம் என்றும், அவர் செல்லும் 22வது நாடு என்றும் என்றும், 1915ம் ஆண்டுக்கும், 1923ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒட்டமான் பேரரசுப் படைகளால் 15 இலட்சம் அர்மேனியர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.