2016-06-22 15:38:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 4


ஜூன்,22,2016.  நாடு துறந்து, நலம் துறந்து, உறவுகள் துறந்து, கிறிஸ்தவம் பரப்ப, குறிப்பாக, இந்தியாவில் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்கும் ஆவலில் முதலில், தனது பதினெட்டாவது வயதில் அயர்லாந்து நாடு சென்றார் அன்னை தெரேசா. அங்கு லொரேத்தோ சபையில் இணைந்தார். அதற்குப் பிறகு, அவர் தனது தாயையோ, உடன்பிறந்த சகோதரியையோ பார்க்கவில்லை. அன்னைக்கு எட்டு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை காலமானார். இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க, லொரேத்தோ சகோதரிகள் பயன்படுத்தும் ஆங்கில மொழியைக் கற்றார். 1929ம் ஆண்டில் அச்சபையின் நவதுறவியாக, இந்தியா வந்த அன்னை தெரேசா, அதே ஆண்டில் என்டேலி புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் புவியியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1931ம் ஆண்டு, மே 24ம் தேதியன்று துறவு சபையில் முதல் வார்த்தைப்பாடுகள் எடுத்தார். அப்போது ஆக்னெஸ் என்ற தனது திருமுழுக்குப் பெயரை, தெரேசா என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர், ஆக்னெஸ், அருள்சகோதரி தெரேசாவாகவே அழைக்கப்பட்டார்.

மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தாவில், அன்னை தெரேசா ஆசிரியர் பணியாற்றிய பள்ளி, வாழ்க்கையில் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்கானது. அந்தப் பள்ளியை ஒட்டியே மோத்தஜில் சேரி உள்ளது. பள்ளியின் மதிய இடைவேளை நேரங்களில், பளபளப்பான உடையணிந்த அப்பள்ளி மாணவர்கள், துள்ளிக் குதித்து ஆனந்தமாக வெளியே ஓடி வருவார்கள். இவர்கள் உண்ணும் விதத்தையும், அதற்குப் பின்னர் அவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதையும், அந்தச் சேரிப் பிள்ளைகள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். இந்த ஏழைச் சேரிக் குழந்தைகளின் விழிகளில் பிரதிபலித்த உணர்ச்சிகளை அன்னை கவனித்தார்கள். சேற்றிலே தவழும் சிரித்த முகங்களைச் சிந்தித்தார்கள். அந்தப் பிஞ்சுக் கரங்கள் எழுதுகோல்களைப் பிடிக்கும் நாளுக்காக ஏங்கினார் அன்னை தெரேசா. அதற்காகச் செபித்தார். 1944ம் ஆண்டில் அந்தப் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்  அன்னை தெரேசா. பள்ளிக்கு வெளியே சென்று ஏழைகளுக்குத் தொண்டுபுரிய விரும்பினார். பள்ளி மாணவிகளை, சிறிய இயக்கமாக ஒன்றுபடுத்தினார் அன்னை. சேரிகளுக்கும், மனிதர் மதிக்காத மனிதரிடத்தும் மாணவிகளை அழைத்துச் சென்றார். ஆனால், இதற்கு கன்னியர் இல்லத் தலைவரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. அதோடு, கிறிஸ்தவத் தலைவர்களும் அன்னையின் விருப்பத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அன்னைக்கு, சபையின் கட்டுப்பாடுகளையும், சட்ட விதிமுறைகளையும் மீற இயலவில்லை. மீற விரும்பவுமில்லை. அதேநேரம், அதைச் சரி என்று ஏற்கவும் மனம் தீவிரமாக மறுத்தது.

அன்பு செலுத்தத் தடை என்றால், அதைத் தாண்டிச் செல்லவே அன்னை தெரேசாவின் மனம் துடித்தது. ஏழைகளின் சேவைக்கு வாய்ப்பில்லாத இந்தப் பள்ளிப் பணி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. அன்பு வேண்டி, ஏக்கம் தேக்கி, வானம் பார்த்து, இரத்தக் கண்ணீர் வடித்த ஏழை நெஞ்சங்களையே அன்னையின் மனம் ஏங்கி நின்றது. அன்னை தெரேசா அவர்கள், தனது இலட்சியப் பாதையில் தன்னை வழிநடத்துமாறு இடைவிடாது இயேசுவிடம் செபித்தார். நான்கு சுவர்களுக்குள், வளமான வாழ்வுக்குள் அடங்கிவிடும் துறவறம் தன் இலட்சியத்திற்கு முதல் இடர்ப்பாடு என்று உணர்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் கட்டாயத்தில் இருந்தார். இது பற்றிய இடைவிடா சிந்தனை, நீண்ட நேரம் செபம், சோர்வில்லா உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஏமாற்றம். இவை அன்னை தெரேசாவின் உடல்நிலையைப் பாதித்தது. எனவே அவரை ஓய்வெடுத்துக்கொள்ளும்படி இல்லத் தலைவரும், மற்றவரும் வற்புறுத்தினர். இதனால் டார்ஜிலிங் சென்று ஓய்வெடுக்க ஒத்துக்கொண்டார் அன்னை. 1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி. கொல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங் செல்லும் இரயிலில் உட்கார்ந்திருந்தார். இயற்கை அழகு நிறைந்த மலைப்பாதை வழியாக, வளைந்து வளைந்து சென்றது இரயில். இனிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த, மனதைப் பரவசப்படுத்தும் அமைதியான சூழல் அது. அன்னை ஆழ்ந்து தியானத்தில் மூழ்கினார். அதுவரை அனுபவித்தறியாத ஓர் இனிய இன்பமயமான உணர்வில் மெய் மறந்தார். அப்போது ஒரு காட்சி அவரது மனதில் ஓடியது. இரயில் நிறுத்தத்ததையொட்டிய சாலையோரத்தில், ஒரு முதியவர் மரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அம்மனிதரது ஈனக்குரலுக்குச் செவிமடுப்பார் யாருமின்றி, அனாதையாக அவர் இறந்தார். திடீரென்று சுய நினைவுக்கு வந்த அன்னையின் மனம் பதறியது. இறைவா! இது என்ன நினைவா? அல்லது கனவா? அல்லது ஒரு மனப்பிரமையா? என்று செபித்தார். மனம் குழம்பியது. இறைவா, அமைதியைக் கொடு என்று மன்றாடினார் அன்னை.

டார்ஜிலிங் சென்று கொண்டிருந்த இரயில், இயற்கை அழகு கொஞ்சும் பாதையில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எத்தனை முறை செபித்தும், கைவிடப்பட்ட நிலையில் வயதானவர் இறந்த அந்தக் காட்சி அவர் மனதைவிட்டு அகல மறுத்தது.  ஆனால் மனதின் ஆழத்தில் ஓர் இனிய குரல் ஒலித்தது. ஒடுக்கப்படுபவனும், தெருவில் நிர்க்கதியாய் இறந்து கிடக்கிறவனும், ஹான்சென் நோயால் மனம் நொந்து உள்ளம் வெதும்புவனும் நானே, சமூகத்தில் கடைப்பட்டவர்களில் யாருக்காவது நீ ஏதாவது செய்தால், அதை எனக்கே செய்தாய் என்ற குரல் கேட்டது. இந்தக் கடைசி வரிகள் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அன்னை சிலிர்த்துப்போய்க் கண்களைத் திறந்தார். மனம் அமைதியை உணர்ந்தது. தான் செல்ல வேண்டிய திசை கிடைத்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. இரயிலில், அந்த நேரத்தில், அந்தக் காகிதத்தில் அன்னை எழுதிய எழுத்துக்களே அவரின் புதிய பணிக்கு வித்திட்டன. 1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதிதான் அந்த நாள். இரயில் டார்ஜிலிங் நோக்கிச் சென்றது. ஆனால் அன்னை தெரேசாவின் இதயம் புதிய இலட்சியத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“நல்ல கருத்துக்கள், உயர்ந்த இலட்சியங்கள் இவை பற்றி அடிக்கடி சிந்தனை செய்தால் அவற்றில் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு ஏற்பட்டால் அதற்காக ஏங்குவோம். ஏங்கினால் தேடுவோம். தேடினால் நம்மையும் அறியாமல் ஒருநாள் நம் வாழ்வில் அவை புகுந்து நமக்குச் சொந்தமாகும்” (வேண்டைக்).   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி   








All the contents on this site are copyrighted ©.