2016-06-22 16:00:00

அர்மேனியா, அஜர்பைஜான் தலைவர்கள் அமைதிக்கு இசைவு


ஜூன்,22,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்மேனியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இவ்வேளையில், Nagorno-Karabakh பகுதி குறித்த மோதலுக்கு அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் தலைவர்கள் அமைதியான தீர்வு காண்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டிலிருந்து பிரிந்த Nagorno-Karabakh பகுதி குறித்து பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு, அர்மேனிய அரசுத்தலைவர் Serzh Sarkisian, அஜர்பைஜான் அரசுத்தலைவர் Ilham Aliyev ஆகிய இருவரும் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதோடு, பிரச்சனைக்குரிய அப்பகுதியில் பன்னாட்டு கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இவ்விரு தலைவர்களும் இசைவு தெரிவித்துள்ளனர்.

இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்கள், St.Petersburg நகரில் இவ்விரு தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டது.

Nagorno-Karabakh பகுதி குறித்து, 1988க்கும், 1994ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சண்டையில், முப்பதாயிரம் பேர் வரை இறந்தனர். இவ்விரு நாடுகளும், பெருமளவில் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.