2016-06-21 16:07:00

வீட்டுவேலைப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட ..


ஜூன்,21,2016. வீட்டுவேலை செய்வதற்காக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில், பாலியல் கொடுமைகள், வன்முறை மற்றும் ஊதியமின்மையால் நூற்றுக்கணக்கான வீட்டுவேலைப் பணியாளர்கள் துன்புறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை காரித்தாஸ், இப்பணியாளர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு, அரசு குடியேற்றதாரர் கொள்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தப்படல், குறைவான வேலைவாய்ப்பு, குடும்ப முறிவுகள் போன்ற காரணங்களால், வீட்டுவேலை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை அரசு ஊக்கப்படுத்தவில்லை என, அரசுப் பேச்சாளர் Rajitha Senaratne அவர்கள் தெரிவித்தார்.

அரசின் இக்கூற்றை மறுத்துள்ள, இலங்கை காரித்தாஸ் அமைப்பின் குடியேற்றதாரப் பணியாளர் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Thusari Fernando அவர்கள், மக்களை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, மற்ற நாடுகளுடன் அரசு நேரிடையாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நாற்பது இலட்சம் இலங்கை மக்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் 2010ம் ஆண்டில் 410 கோடி அமெரிக்க டாலரை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர் என, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.