2016-06-21 16:01:00

காவல்துறை கொலைகள் நிறுத்தப்பட பிலிப்பைன்ஸ் ஆயர்கள் அழைப்பு


ஜூன்,21,2016. பிலிப்பைன்சில் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலுக்குப்  பின்னர், காவல்துறையினரால் நடத்தப்படும் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் சிறிய வர்த்தகர்கள், அதை ஊக்குவிப்பவர்கள் மற்றும் பிறர், கைதுகளை எதிர்க்கும்போது அவர்கள் சுடப்படுகின்றனர் என்று செய்திகள் வெளியானதையடுத்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், நாட்டின் சட்ட அமைப்பாளர்கள் இக்கொலைகளைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுள்ளனர்.

Rodrigo Duterte பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த மே 9ம் தேதி தேர்தலுக்குப் பின்னர், ஏறக்குறைய 42 பேரை, காவல்துறை சுட்டுக் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆயர்கள், மனித வாழ்வை மதித்து, மரணக் கலாச்சாரத்தை ஒழிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இம்மாதம் 30ம் தேதி பதவியேற்பதற்கு முன்னர், இச்செவ்வாய் முதல், ஒன்பது நாள்களுக்குத் தொடர்ந்து திருப்பலிகளில் சிறப்பான செபங்கள் செபிக்கப்படும் என, மனிலா கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தான் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், போதைப்பொருள் மற்றும் பிற குற்றவாளிகள் மீது நடத்தப்படும் போரில், இரத்தம் சிந்தப்படும் என, Rodrigo Duterte அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.