2016-06-20 14:15:00

வாரம் ஓர் அலசல் – துன்புறுவோர்க்குத் தோள் கொடுப்போம்


ஜூன்,20,2016. தங்களின் நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்த தாவீதும், கிறிஸ்டியானும் லிபியாவுக்குப் புறப்பட்டனர். இவர்கள் பாதை மாறி, ஒரு பாலைவனம் சென்றுவிட்டனர். பயணக் களைப்பு. கடும் பசி. தாகம். எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா, யாராவது உணவு கொடுப்பார்களா என்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நடந்தனர். தூரத்தில் ஒரு ஒயாசிஸ், ஒரு பாலைவனச் சோலை தெரிந்தது. உடம்பில் கொஞ்சம் தெம்பை வரவழைத்துக்கொண்டு இருவரும் நடந்தனர். அந்த இடத்தை நெருங்கியபோது அது ஒரு மசூதி என்று அவ்விருவரும் தெரிந்துகொண்டனர். உடனே தாவீது சொன்னார் – நான் எனது கிறிஸ்தவப் பெயரை முகமது என மாற்றிச் சொல்கிறேன். நீயும் ஏதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று. அதற்கு கிறிஸ்டியான், நான் பெயரை மாற்றவே மாட்டேன், கிறிஸ்டியான் என்றே என்னை அறிமுகப்படுத்துவேன் என்றார். இருவரும் களைத்துச் சோர்ந்த நிலையில் அங்குச் சென்றனர். அந்த மசூதியின் தலைவரிடம் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இவர்களின் நிலையைப் பார்த்த அவர் மனமிரங்கி, கிறிஸ்டியானுக்கு உடனடியாக, உணவும் நீரும் கொடுக்கச் சொன்னார். ஆனால், முகமதுவிடம், தம்பி, நம்ம இரமதான் நோன்பு மாதத்தில் இருக்கிறோம், அதனால், இந்த நேரத்தில் நாம் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியும் அல்லவா என்றார். இதைக் கேட்ட தாவீது மயங்கி விழுந்தார்.

அன்பு நேயர்களே, உள்நாட்டுக் கலவரங்கள், போர்கள், இன, சமய அடக்குமுறை, வறட்சி, பசி பட்டினி, இயற்கைப் பேரிடர்கள் போன்ற காரணங்களால் கட்டாயமாகத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் புலம்பெயர்கின்ற, அகதிகளின் நிலை இதுதான். பாதுகாப்பான வாழ்வு தேடி வேறு இடம் செல்லும் இம்மக்கள் வழிப்பயணத்தில் எதிர்கொள்ளும் துன்பங்கள், இப்படிச் சொல்ல வைக்கின்றது. இக்காலத்தில் நடக்கும் சமயப் பாகுபாடு, சிறுபான்மையினர்க்கு எதிரான அடக்குமுறை போன்றவையும் இதற்குக் காரணம் என்று சொல்லலாம். ஈராக் நாட்டின் Falluja நகரில் இடம்பெறும் கடும் சண்டையினால், மனிதாபிமானப் பேரிடரே ஏற்பட்டிருப்பதாக பிறரன்புப் பணியாளர்கள் சொல்கின்றனர்.  பாக்தாத் நகருக்கு மேற்கே ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Falluja  நகரம் 2014ம் ஆண்டிலிருந்து ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் கோட்டையாக இருந்தது. தற்போது இந்நகரை, ஈராக் இராணுவம் கைப்பற்றியுள்ளது. நான்கு வாரங்கள் நடந்த இத்தாக்குதலில், ஏறத்தாழ எண்பதாயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவர்கள் தப்பித்துச் செல்லும் வழியில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். வெறுங்கையோடு தப்பித்து வந்துள்ள இந்த மக்களுக்கு எல்லா அடிப்படை வசதிகளும் தேவைப்படுகின்றன என்று நிவாரணப் பணியாளர்கள் சொல்கின்றனர். வருகின்ற சில நாள்களில் அப்பகுதியில் 47 டிகிரி செல்சியுஸ் வெப்பம் இருக்குமாம்.

அன்பு நேயர்களே, ஜூன் 20, இத்திங்கள் உலக புலம்பெயர்ந்தவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம், இத்தினத்திற்கென புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. உலகில், கடந்த ஆண்டில், போரினால், ஒவ்வொரு நிமிடத்துக்கும் 24 பேர் வீதம் புலம்பெயர்ந்தனர். அகதிகள், புகலிடம் தேடுபவர் அல்லது நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தவர் என, ஓராண்டில் ஐம்பது இலட்சம் என அதிகரித்து, 2015ம் ஆண்டின் இறுதியில், ஆறு கோடியே 53 இலட்சம் பேர், பதிவு செய்யப்பட்டனர். இவ்வெண்ணிக்கை, இப்பூமியில் வாழ்வோரில் 113 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் இவ்வளவு பெரிய எண்ணிக்கை இப்போதுதான். அதோடு, ஐரோப்பாவில் பிற நாட்டவர் மீதான வெறுப்புணர்வும் அதிகரித்து வருகிறது. உலகில் முதல் முறையாக, புலம்பெயர்ந்தவர் எண்ணிக்கை ஆறு கோடிக்கு அதிகமாகியுள்ளது. இவர்களில் 54 விழுக்காட்டினர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சொமாலியாவைச் சேர்ந்தவர்கள். அனைத்து அகதிகளுள் 51 விழுக்காட்டினர் 18 வயதுக்குட்பபட்டவர்கள். மொத்த அகதிகளுள் 86 விழுக்காட்டினர், வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் புகலிடம் தரப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டில் ஐரோப்பாவுக்கு கடல் வழியாக 10,11,700க்கும் மேற்பட்ட அகதிகளும், தரை மார்க்கமாக, ஏறத்தாழ 35 ஆயிரம் பேரும் சென்றனர் என, உலக குடியேற்றதாரர் நிறுவனம்(IOM) கூறியுள்ளது.

 

இலங்கையில், எழுத்தில் வடிக்க முடியாத துயரம் ஏற்படுத்திய இறுதிப் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழர்கள் இராணுவ முகாமில்தான் இருக்கிறார்கள். பல இலட்சம் ஏக்கர் தமிழர் நிலங்கள், இராணுவத்தின் கையில்தான் இருக்கின்றன. ஆயுத யுத்தம் முடிந்து இருக்கிறது, ஆனால் பண்பாட்டு யுத்தம் தொடரத்தான் செய்கிறது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள அரச மரங்களுக்கு அடியில் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகப் பணம் கொடுத்து சிங்கள மக்களைக் குடியமர்த்துகிறார்கள். இந்தச் சிங்கள மக்கள் வட்டிக்குப் பணம் தருகிறார்கள். தமிழர்கள், சிங்களர்களை அண்டிப் பிழைக்கும் நிலையை அரசு திட்டமிட்டுச் செயல்படுத்துகிறது.... இப்படி, யாழ்ப்பாண பகுதியில் சில இளைஞர்கள் சொன்னதாக, ஓர் இதழில் (விகடன்) ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

புலம்பெயர்ந்தவர் உலக தினத்தை முன்னிட்டு, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  “மற்ற எல்லாரைப் போலவே, புலம்பெயர்ந்தவர்களும் மக்கள்தான். ஆனால், இவர்கள், தங்களின் வீடுகள், வேலை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, போரில் பலரை இழந்தவர்கள். இம்மக்களின் கதைகளும், அவர்களின் முகங்களும், நீதியில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நம் அர்ப்பணத்தைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது. நாம் அவர்களோடு இருக்கவும், அவர்களைச் சந்திக்கவும், அவர்களை வரவேற்கவும்,  அவர்கள் பேசுவதைக் கேட்கவும் விரும்புகிறோம். கடவுளின் திட்டத்திற்கு ஒத்திணங்கும் வகையில், நாம் அமைதியின் ஆர்வலர்களாக மாற வேண்டும்" என்றார்.

இவ்வாண்டு இவ்வுலக தினத்தை, UNHCR நிறுவனமும், நாம் புலம்பெயர்ந்தவர்களோடு இருக்கிறோம் என்ற தலைப்பிலே சிறப்பித்தது. உடல் அளவிலும், மனத்தளவிலும் கடும் துன்பங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தோள் கொடுப்பது நம் கடமை.

இளைஞர் லீ, கடுமையான உழைப்பாளி, ஆனால் எவ்வளவு உழைத்தாலும் அது அவரது அன்றாட பசிக்கேப் போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும் தனது வருமானத்தின் மூலம் கிடைக்கும் உணவை, தனது வீட்டருகில் உள்ள ஏழை எளியவர்களுடன் பகிர்ந்துதான் உண்பார். ஏழைகளின் வறுமை நிலை மாறவேண்டும் அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையைத் தரவேண்டும், எளியவர்களுக்கு நல்ல சாப்பாடு வழங்க வேண்டும் என்ற ஏக்கம் லீக்கு ஏற்பட்டது. இதற்காக இறைவனிடம் செபித்தபோது,'  நாளை காலை ஒரு பலுானுடன் அரண்மனையை நோக்கிச் செல், உன் விருப்பம் நிறைவேறும்' என்று ஒரு குரல் கேட்டது. இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற பலுானுடன் நடக்க ஆரம்பித்தார் லீ. வழியில் ஒரு ஏழைத் தாய், அழுதுகொண்டிருந்த தன் மகனைச் சமாதானப்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று கொண்டிருந்தார் ஆனாலும் குழந்தை எதற்கும் கட்டுப்படாமல் அழுதுகொண்டே இருந்தது. இதைப் பார்த்த லீ, தன் கையில் இருந்த பலுானைக் குழந்தையின் கையில் கொடுத்தார். உடனே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சிரித்தபடி தன் அம்மாவை கட்டிப்பிடித்து விளையாட ஆரம்பித்தது. இதனால் மகிழ்ந்து போன அந்தத் தாய் லீயைப் பார்த்து கும்பிட்டு நன்றி தெரிவித்துவிட்டு, உன் அன்புக்கு நான் என்ன செய்யப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு ஒரு பழத்தைக் கொடுத்தார். பழத்தை வாங்கிக்கொண்டு லீ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

 

வழியில் ஒரு நடக்கமுடியாத ஒருவரை சந்தித்தார் லீ. அவரது முகத்தைப் பார்த்த உடனேயே அவர் பசியோடு இருப்பது தெரிந்தது. கையில் இருந்த பழத்தை அவரிடம் கொடுத்ததும், அதற்காகவே காத்திருந்தது போல வாங்கி ஆசை ஆசையாய் பழத்தைச் சாப்பிட்டு பசியாறினார். பின் லீயிடம் ஒரு பழைய போர்வையைக் கொடுத்து இதை வைத்துக்கொள் என்று கொடுத்தார். மீண்டும் நடைப்பயணத்தை துவங்கிய லீ, வழியில் ஒரு முதியவர் குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, கையில் இருந்த போர்வையால் அவருக்குப் போர்த்திவிட்டார். முதியவர் குளிரில் இருந்து விடுபட்டார். புன்னகையுடன் தன்னிடம் இருந்து ஒரு மருந்து குப்பியைக் கொடுத்து 'இது ஒரு உயிர்காக்கும் மருந்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் வல்லமை கொண்டது, நான் பல காலமாக வைத்திருக்கிறேன், வயதான எனக்கு இனி தேவை இல்லை உன்னைப் போன்ற அன்புமயமான இளைஞனுக்குதான் இது தேவை' என்று சொல்லிக் கொடுத்தார். மருந்து குப்பியுடன் நடந்த லீ அரண்மனையை நெருங்கினார். இளவரசி யாராலும் குணப்படுத்த முடியாத காய்ச்சலால் துன்புறுவதாகவும், இதனால் நாட்டின் அரசர் கவலையுடன் இருப்பதாகவும் கேள்விப்பட்ட லீ நேராக அரசரைப் பார்த்து தன்னிடம் இருந்த மருந்து குப்பி பற்றிய விவரம் கூறிக் கொடுத்தார். அரசருக்குச் சந்தேகம். ஆனாலும், லீயின் கண்களில் இருந்த அன்பையும், முகத்தில் குடியிருந்த தெய்வீகக்களையையும் பார்த்து நம்பிக்கையுடன் தன் மகளுக்கு மருந்தினைக் கொடுத்தார். இளவரசி மருந்து சாப்பிட்ட அடுத்த நிமிடமே குணமானார். மரணதருவாயில் இருந்த தன் மகளைக் காப்பாற்றிய இளைஞனையே தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து நாட்டின் இளவரசாக்கினார். இளவரசனாகிவிட்ட லீ, தான் நினைத்தது போலவே, வீட்டருகே இருந்த ஏழை எளியவர்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஏழை எளியவர்களும் ஏற்றம் பெறும்படியாக நாட்டை நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் ஆண்டார். (நன்றி தினமலர்)

அன்பர்களே, மதுரை டிவிஎஸ் லட்சமி பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்ய மீனாட்சி தனது ஏழாவது வயதில், இரண்டாவது வகுப்பு படிக்கும்போது எழுதிய கதை இது. ஆம், ஏழை எளியவர்களிடம் இரக்கமும் பாசமும் கருணையும் காட்டினால் வாழ்க்கையில் யாரும் உயர்ந்த நிலையை அடையலாம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.