2016-06-20 16:11:00

உலகுக்கு, கிறிஸ்துவின் இரக்கமுள்ள அன்பு தேவைப்படுகின்றது


ஜூன்,20,2016. கிறிஸ்துவும், அவரின் மீட்பும், அவரின் இரக்கமுள்ள அன்பும், எக்காலத்தையும்விட இக்காலத்தில், உலகுக்கு அதிகம் தேவைப்படுகின்றன என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?, நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என, இயேசு தம் சீடரிடம் கேட்ட, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்திலிருந்து சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, பலர் தங்களைச் சுற்றிலும், தங்களுக்குள்ளும் வெறுமையை உணர்கின்றனர், மற்றவர்கள், பாதுகாப்பின்மை மற்றும் சண்டையால், பரபரப்பான மற்றும் நிச்சயமற்ற தன்மையிலும் வாழ்கின்றனர் என்று கூறினார்.

நம் கடினமான கேள்விகளுக்குப் போதுமான பதில்கள் தேவைப்படுகின்றன என்றும், கிறிஸ்துவில், அவரில் மட்டுமே, ஒவ்வொரு மனித ஏக்கங்களுக்கும், உண்மையான அமைதியையும், நிறைவையும் காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யாருமே அறிய முடியாத அளவில், இயேசு மனித இதயத்தை அறிந்திருக்கிறார், இதனாலே, அவர் மனித இதயத்தைக் குணமாக்கி, அதற்கு வாழ்வும், ஆறுதலும் அளிக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை.

தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்காமல் இருக்கும்பொருட்டு, தங்களின் நேரம், முயற்சி, ஏன், தங்கள் வாழ்வையே இயேசுவுக்கு அர்ப்பணிக்கும் நம் சகோதர, சகோதரிகளை நினைப்போம், நம் விசுவாச மற்றும் சாட்சிய வாழ்வுப் பயணத்தில் இயேசு தூய ஆவியார் வழியாக நமக்கு வலிமை தருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.