2016-06-20 16:23:00

ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பேரவைக்கு திருத்தந்தை வாழ்த்து


ஜூன்,20,2016. கிரேக்க நாட்டின் Crete தீவில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து பேரவை நடத்தும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களுக்காகச் செபிக்குமாறு கத்தோலிக்கரை விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று, ஆர்த்தடாக்ஸ் சபைகள் தூய ஆவியார் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றன என்றும், அப்பேரவையில் கலந்துகொள்ளும் முதுபெரும் தந்தையர், பேராயர்கள் மற்றும் ஆயர்கள் மீது தூய ஆவியார் பொழியப்பட செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

இக்கால உலக சமுதாயம் சந்திக்கும் சில முக்கிய விவகாரங்கள் பற்றி கலந்து பேசுவதற்காக ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்கள் கூடியிருக்கும்வேளை, அச்சபைகளின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காகவும் செபிப்போம் என்றுரைத்த திருத்தந்தை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் சேர்ந்து அருள்நிறைந்த மரியே என்ற செபத்தையும் சொன்னார்.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளில் முதல்முறையாக உலகிலுள்ள ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள் சேர்ந்து புனித மற்றும் பெரிய பேரவை ஒன்றை நடத்துகின்றன. இதில், இரஷியாவின் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. உக்ரைன் கிளைத் திருஅவைக்கு ஆதரவு வழங்கப்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.

உலக ஆர்த்தடாக்ஸ் சபைகளின் இறுதி, தூய மற்றும் உயரிய பேரவை 1054ம் ஆண்டில் நடந்தது. அப்போதுதான், கிறிஸ்தவத்தில் “பெரும் பிரிவினை”என்று அழைக்கப்படுகின்ற பிரிவினை ஏற்பட்டது. இதில் கத்தோலிக்கமும், ஆர்த்தோடாக்ஸ் சபையும் இரண்டாகப் பிரிந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.