2016-06-18 11:17:00

பொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த டயோஜீனஸ் என்ற கிரேக்க மேதை ஏதென்ஸ் நகர வீதிகளில் பகல் நேரத்தில் ஒரு விளக்கை வைத்துக்கொண்டு அலைந்தபோது, மக்கள் அவரிடம் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டால், "நல்ல மனிதர்களைத் தேடுகிறேன்." என்று சொல்வாராம். மனிதர், மனிதரைத் தேடிய பல கதைகள் நமக்குத் தெரியும். வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்களும் நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில், பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி.

‘நான் யார்’ என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள் உள்ளன... என் குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில், நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில், மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது.

இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இந்த அடிப்படைக் கேள்வியை மையப்படுத்தி, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

நான் கல்லூரியில் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சொன்ன ஒரு சில தகவல்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு, தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, பிரதம மந்திரி அல்லது முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல்களைப் பட்டியலிடுவதன் முக்கிய நோக்கம், நாட்டில் தங்களைப் பற்றிய, தங்கள் ஆட்சி பற்றிய எண்ணங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதே.

ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்த கேள்வி: "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இந்தக் கேள்வியின் பின்னணியில் உறுத்திக்கொண்டிருக்கும் பயம், சந்தேகம் இவையே, இந்தக் கேள்வியை இவர்களிடம் எழுப்புகின்றன. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, அதன்படி செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை...

தமிழகத் தலைவர்கள் யார்? அவர்களது உண்மை உருவம் என்ன? அவர்களைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை அண்மையத் தேர்தல் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. மக்களுக்குமுன் போலி முகமூடிகளை அணிந்து வாழும் நம் நாட்டுத் தலைவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" – இயேசு, இந்தக் கேள்வியை, அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல, இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடமாக, அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளைத் தாண்டி, மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம்... இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே...

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

ஹலோ, உங்களைத் தான்... என்னையும் தான்... இந்தக் கேள்வி நமக்குத் தான்...

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் நான் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.

நான் படித்தவற்றை விட, பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நான் மனப்பாடம் செய்தவற்றை விட, மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனால், பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல. எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி, சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.

அதையும் அற்புதமாக அவர் முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து, அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு ஈடுபாடு, நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது, நானே நேரில் அவற்றைக் கண்டுவிட்டேன். இனி உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுப் பேசினார்.

"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி. செய்வீர்களா?" என்று கேட்டார், அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப்போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைகளுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்ய விழைந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.

இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறியப் பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரி. 13: 1)

எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. நம் சொந்த வாழ்விலும், அயலவர் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்த அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.