2016-06-18 13:39:00

பிரபஞ்சம், கடவுளின் அன்பு பற்றிப் பேசும் மகிழ்வான பேருண்மை


ஜூன்,18,2016. “இந்தப் பிரபஞ்சம், அறிவியல் ஆய்வுகளைவிட கடவுள் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பு பற்றிப் பேசும் மகிழ்வான பேருண்மையாகும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 24 முதல் 26 வரை அர்மேனியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்களை, இச்சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டது திருப்பீடச் செய்தித் தொடர்பகம். 

ஜூன் 24, வெள்ளியன்று, உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காலை 9 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை, அர்மேனியாவின் Yerevan நகர் “Zvartnots” பன்னாட்டு விமான நிலையத்தை மாலை மூன்று மணியளவில் சென்றடைவார்.

Zvartnots” விமான நிலையத்தில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர்,  Etchmiadzinல் திருத்தூதர் பேராலயத்தில் செபம், அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவரைச் சந்தித்தல், அம்மாளிகையில் அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரை, அப்போஸ்தலிக்க மாளிகையில் கத்தோலிக்கோஸ் அவர்களைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.

ஜூன் 25 சனிக்கிழமையன்று Tzitzernakaberd நினைவிடத்தைப் பார்வையிடுதல், Gyumri சென்று Vartanants வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுதல், ஏழு வியாகுலப் பேராலயம் செல்லுதல், Gyumri புனித மறைசாட்சிகள் பேராலயம் செல்லுதல், பின் Yerevan நகருக்குத் திரும்பிச் சென்று, அந்நகர் குடியரசு வளாகத்தில், அமைதிக்கான கிறிஸ்தவ ஒன்றிப்புச் செபத்தில் கலந்து கொள்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.

ஜூன் 26 ஞாயிறன்று, அர்மேனிய கத்தோலிக்க ஆயர்கள் சந்திப்பு, அர்மேனிய அப்போஸ்தலிக்க பேராலயத்தில் இறைவழிபாட்டில் கலந்து கொள்தல் உட்பட சில பயணத் திட்டங்களை நிறைவு செய்து, மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை.

இரவு 8.40 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 18, இச்சனிக்கிழமை மாலையில் உரோம் வில்லா நாசரேத் இல்லத்தைப் பார்வையிடச் செல்கிறார். மாலை 4.45 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, இரவு ஏழு மணியளவில் இவ்வில்லச் சந்திப்பை நிறைவு செய்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.