2016-06-18 13:51:00

திருத்தந்தையும் வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்களும்


ஜூன்,18,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களாக, இவ்வெள்ளி மாலையில், உரோம் நகரிலுள்ள இரு வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்கள் இல்லத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாலை நான்கு மணிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, முன்னறிவிப்பு ஏதுமின்றி, மொந்தே தபோர் இல்லம் சென்று, அங்கு வாழ்ந்து வரும், பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த எட்டு வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

பின்னர், உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்கள் வாழும் காசா சான் கயத்தானோ என்ற இல்லம் சென்று, அங்கு வாழ்ந்து வரும் 21 வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இந்த வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்கள் பற்றி அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அருள்பணியாளர்கள் யூபிலியை அண்மையில் சிறப்பித்த திருத்தந்தை, இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாமல் இருந்த அருள்பணியாளர்களைச் சந்தித்து, அவர்கள் மீது தான் கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்க விரும்பினார் என்று கூறினார்.

பல ஆண்டுகள் திருஅவைக்கும், விசுவாசிகளுக்கும் அரும்பணியாற்றிய பின்னர், ஓய்வு பெற்று இந்த அருள்பணியாளர்கள் இங்கு உள்ளனர், ஆனால் பலர் இவர்களை நினைப்பதே இல்லை என்று கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.