2016-06-17 16:50:00

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் ஒன்றிணைந்த உதவி


ஜூன்,17,2016. உதவி தேவைப்படும் மக்களுக்கு, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து உதவுவது பற்றிக் கேட்கும்போதோ அல்லது அதை அனுபவிக்கும்போதோ, அது மிகுந்த நம்பிக்கையின் ஊற்றாக உள்ளது என்று திருப்பீட அவை ஒன்று கூறியுள்ளது.

முஸ்லிம்கள் கடைப்பிடித்துவரும் இரமதான் புனித மாதத்தை முன்னிட்டு, உலக முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இரக்கச் செயல்களை ஆற்றும்போது, தனிப்பட்ட விதத்திலும், பொதுவிலும் மிகவும் நம்பிக்கை நிறைந்த சான்றை வழங்க முடியும் என்று கூறியுள்ளது.

பிறருக்கு, குறிப்பாக, தேவையில் இருப்போர்க்கு இரக்கத்தையும், பரிவையும் காட்ட வேண்டுமென, இரக்கமுள்ள இறைவன் நம்மிடம் கேட்கிறார், இந்த இறைவனின் பண்புகளை, நாம் மிகச் சிறப்பாகப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

இக்காலத்தில், போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலரைப் பார்த்து, குறிப்பாக, வயது முதிர்ந்தோர், சிறார், மற்றும் பெண்களைப் பார்த்து வேதனையடைகின்றோம், மனித வர்த்தகம், வறுமை, நோய், இயற்கைப் பேரிடர்கள், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றுக்குப் பலிகடா ஆனவர்களையும் நினைக்கிறோம், இத்தகைய துன்பச் சூழல்களில் நாம் நம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இரக்கம் என்பது மிகவும் விருப்பமான ஒன்று, கிறிஸ்தவமும் இஸ்லாமும் இரக்கமுள்ள இறைவனில் நம்பிக்கை வைத்துள்ளது என்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான் வாழ்த்துச் செய்தி கூறுகிறது.

இரமதான் மாதத்தை முன்னிட்டு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அந்த அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran,  அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot, M.C.C.I. ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். 

ஜூன் 6ம் தேதி தொடங்கிய இரமதான் மாதம், ஜூலை 5ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.