2016-06-16 16:44:00

சர்க்கஸ் உலகம் சந்திப்புக் கலாச்சாரத்தைப் பரப்புகின்றது


ஜூன்,16,2016. சர்க்கஸ் உலகம், சந்திப்புக் கலாச்சாரத்தைப் பரப்புகின்றது மற்றும் இதில் பணியாற்றுகின்றவர்கள், கிறிஸ்துவைவிட்டு தூரமாக விலகி இருப்பவர்களுக்குக்கூட கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்குரிய சிறப்பான வாய்ப்பைப் பெறுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆறாயிரத்துக்கு மேற்பட்ட பல்வேறு இத்தாலியக் கலைஞர்களை இவ்வியாழன் காலையில், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, விழாக்காணுவதும், மகிழ்வும் இவர்களின் தனித்துவ அடையாளம் மற்றும் அவர்களின் தொழில் என்று கூறினார்.

வறியவர், வீடற்றவர், உதவி தேவைப்படுபவர், கைதிகள் மற்றும் சமூகத்தில் வாய்ப்பிழந்த சிறாருக்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, சோகம் நிறைந்த நேரங்களில் அழகையும் மகிழ்வையும் விதைப்பதும்கூட இரக்கச் செயலே என்றார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, இப்புதன், இவ்வியாழன் தினங்களில் உரோமையில், சர்க்கஸ் கலைஞர்கள், வீதி நாடகக் கலைஞர்கள், பூங்காக்களிலும் மற்ற இடங்களிலும் கேளிக்கை விளையாட்டுக்களை நடத்துபவர்கள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்பனைக்காரர்கள், பாடகர்கள், கிராமியக் கலைஞர்கள் என, கலை உலகத்தினர் யூபிலி விழாவைச் சிறப்பித்தனர். இவர்களை இவ்வியாழனன்று சந்தித்தார் திருத்தந்தை. திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும் அவை, கலைஞர்களின் யூபிலி விழாவை நடத்தியது. 

இக்கலைஞர்கள், திருத்தந்தைக்கு முன்னால் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். சர்க்கஸ் விலங்குகளையும் தடவிக் கொடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.