2016-06-16 16:20:00

இறைவேண்டல் செபம், நம் செப வாழ்வின் மூலைக்கல்


ஜூன்,16,2016. கிறிஸ்தவர்களுக்கு, செபங்கள், மாயவித்தை வார்த்தைகள் அல்ல என்றும், வானகத்தந்தையை நோக்கி நாம் செபிக்கும்போது, கடவுள் நம்மை நோக்குகிறார் என்பதை நாம் உணர முடியும் என்றும், இந்த இறைவேண்டல் செபம், நம் செப வாழ்வின் மூலைக்கல் என்றும் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய, திருப்பலியில், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(மத்.6,19-23) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களின் வாழ்வில் செபத்தின் மதிப்பு மற்றும் அதன் பொருள் பற்றி விளக்கினார்.

நம் இறைத்தந்தை நாம் கேட்பதற்கு முன்னரே நம் தேவைகளை அறிந்திருக்கிறார் என்று சொல்லிய இயேசு, மிகவும் சவால் நிறைந்த மற்றும் மிக முக்கியமான நேரங்களில், இறைத்தந்தை என்ற சொல்லையே எப்போதும் பயன்படுத்தினார் என்றும், அந்நேரங்களில் அவர் இறைத்தந்தையிடமே செபித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறைத்தந்தையின் வழியாகவே, கிறிஸ்தவர்கள் என்ற தனித்துவத்தை நாம் பெறுகிறோம், தூய ஆவியாரின் அருளின்றி, யாரும் தந்தையே எனச் சொல்ல முடியாது என்றும் கூறிய  திருத்தந்தை, நாம் இறைத்தந்தையின் குழந்தைகள் என்று உணராமல் அத்தந்தையை நோக்கிச் செபித்தால், அது வெறும் வார்த்தைச் செபமாகவே இருக்கும் என்றும் கூறினார்.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும் என்று இச்செபத்தில் நாம் செபிப்பது, நாம் எல்லாரும் சகோதர சகோதரிகளாகவும், ஒரே குடும்பத்தின் அங்கமாகவும் இருக்கும் உணர்வைத் தருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொருவரையும் மன்னிக்கவும், அவர்களின் பாவங்களை மறக்கவும் நம் இறைத்தந்தையிடம் வேண்டுவது சிறப்பான செபம் என்று சொல்லிய திருத்தந்தை, கடவுள் எனக்குத் தந்தையாக இருக்கிறாரா? அவரை, எனது தந்தை என உணர்கிறேனா? போன்ற கேள்விகளை சிலவேளைகளில் கேட்டு நம்மைப் பரிசோதிப்பது நன்மை பயக்கும் என்றும், இப்படி உணரவில்லையெனில், தூய ஆவியாரின் உதவியைக் கேட்போம் என்றும் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.