2016-06-15 16:06:00

திருத்தந்தை, நெதர்லாந்து நாட்டுப் பிரதமர் சந்திப்பு


ஜூன்,15,2016. நெதர்லாந்து நாட்டுப் பிரதமர் Mark Rutte அவர்கள், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இப்புதன் காலையில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் பிரதமர் Mark Rutte.

இச்சந்திப்புகளில் நடந்த உரையாடல்கள் குறித்து தகவல் வெளியிட்ட, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், நெதர்லாந்து நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நல்லுறவுகள் நிலவுவது குறித்த மகிழ்வு தெரிவிக்கப்பட்டது என்று கூறியது.

இவ்விரு தரப்பும் கவனம் செலுத்தும் புலம்பெயர்ந்தவர் நெருக்கடி நிலை, இன்னும், பல்வேறு பன்னாட்டு விவகாரங்களும் இந்த உரையாடல்களில் இடம்பெற்றன என்றும்  திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

நெதர்லாந்து நாடு வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது, புவியியல் அடிப்படையில் தாழ்ந்த நிலப் பகுதியைக் கொண்டிருப்பதால், டச்சு மொழியிலும், வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் "தாழ்ந்த நாடு" என்னும் பொருள் கொண்ட பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்நாட்டின் 25% நிலப்பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், 2016ம் ஆண்டின் மிஸ் ஜெர்மனி Lena Bröder அவர்களையும் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  26 வயது நிரம்பிய Bröder அவர்கள், ஜெர்மனியில், மறைக்கல்வி மற்றும் பொருளாதார ஆசிரியர். இவர் எழுதிய, என்னிலுள்ள அழகு என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.