2016-06-15 16:41:00

குடியேற்றதாரரின் நெருக்கடிநிலை களையப்பட திருப்பீடம் அழைப்பு


ஜூன்,15,2016. உலகில் இடம்பெற்றுவரும் புலம்பெயர்ந்தவர் பிரச்சனையைக் களைவதற்கு, உலக சமுதாயம் பொறுப்புணர்வுடன், போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டமொன்றில் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தவர் நெருக்கடிநிலை குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், உரையாற்றிய பேரருள்திரு Richard Gyhra அவர்கள், மக்கள் புலம்பெயர்வதற்குரிய காரணங்களை எடுத்துச் சொன்னார்.

சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைகள், வன்முறை ஆயுத மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பிற சமய அடக்குமுறைகளால் இம்மக்கள் புலம்பெயர்கின்றனர் என்றார் பேரருள்திரு Gyhra.

புலம்பெயர்ந்தவர்களும், குடியேற்றதாரரும் பெருமளவாக நாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்குத் தேசிய அளவில் கொள்கைகள் அமைக்கப்படுவதைப் புரிந்துகொள்ளும் அதேவேளை, பாதுகாப்பான மற்றும் தரமான வாழ்வுதேடி கட்டாயமாக வெளியேறும் இந்த நம் சகோதர சகோதரிகளின் சார்பில், திருத்தந்தை உலகத் தலைவர்களுக்கு விண்ணத்திருப்பதை இங்கு குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார் பேரருள்திரு Gyhra.  

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovic அவர்களின் சார்பில், இந்த உரையை ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் வழங்கினார் பேரருள்திரு Richard Gyhra. இவர், அந்த அலுவலகங்களுக்குத் திருப்பீடத்தின் முதல் செயலராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.