2016-06-15 15:47:00

இது இரக்கத்தின் காலம்... – பிறர்க்கு உணவளிப்பவராக இரு


ஒரு துறவியிடம் அவர் சீடர் வந்து, 'சுவாமி... நான் எப்படி வாழவேண்டும் என்பதைத் தெரிவித்தால் நலமாயிருக்கும்’ என்றார். குருவும், அந்நேரத்தில் தூரத்தில் நொண்டிக்கொண்டே வந்த ஒரு நரியைக் காட்டி, அதனுடன் செல், அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது என்று பார். அப்போது நீ எப்படி வாழவேண்டும் என்பது தெரியும் என்றார். நரியைத் தொடர்ந்து சென்ற சீடர், தூரத்தே ஒரு சிங்கம், வேட்டையாடப்பட்ட ஒரு மானின் உடலை இழுத்து வருவதைப் பார்த்து ஒளிந்து கொண்டார். அதைச் சிறிது தின்றுவிட்டு, மீதத்தை நரியிடம் போட்டுவிட்டுச் சென்றது சிங்கம். உடனே சீடனுக்கு, வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது.

அடுத்த நாள் முதல் சீடர், உண்ணாமல், யாரேனும் தனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் எனக் காத்திருக்க ஆரம்பித்தார். நாட்கள் உருண்டன... ஆனால் யாரும் உணவைக் கொண்டுவந்து தரவில்லை. சீடர் உடல் இளைத்து, குருவைத் தேடி வந்தார். நடந்த விடயங்களைக் கூறி, 'குருவே.. அந்த நரிக்கு கொடுத்தாற்போல் யாரேனும் எனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன். ஆனால் யாரும் வரவில்லை எனப் புலம்பினார். பதிலுக்கு குரு, 'அட மடையா.. நீ என்னிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய். நானும் சொன்னேன். ஆனால் நீ நரியைப் பார்த்துத் தப்பாய் புரிந்து கொண்டாய். உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும். சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவியாய், மற்றவர்களுக்கு,  உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும் என்றார். அப்போதுதான் சீடருக்கு எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.