2016-06-14 16:00:00

பகைவர்க்காகச் செபிப்பது நம் இதயங்களைக் குணமாக்கும்


ஜூன்,14,2016. பகைவர்க்காகச் செபிப்பது நம் இதயங்களைக் குணமாக்கும் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

பகைவர்களை மன்னிக்குமாறு இயேசு தம் சீடர்களிடம் கூறிய, மத்தேயு நற்செய்தி வாசகத்தை(மத்.5,43-48) மையப்படுத்தி, திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, நாம் பகைவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் மற்றும் நம்மைத் துன்புறுத்துவோருக்காகச் செபிக்க வேண்டுமென இயேசு சொல்வதை விளக்கினார். 

உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்புகூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக என அக்காலத்தில் சட்ட அறிஞர்கள் போதித்தனர், ஆனால் இயேசுவின் இப்போதனை அதற்கு எதிர்மாறாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, உன் கடவுளை முழு உள்ளத்தோடும், முழு வலிமையோடும், முழு ஆன்மாவோடும் அன்புகூர்வாயாக என்ற பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய கட்டளையை இயேசு மீண்டும் சொல்கிறார் என்றார்.

சட்டத்தின் எழுத்துக்களைவிட அன்பு மிகவும் தாராளம் உடையது என்பதற்கு இயேசு பல எடுத்துக்காட்டுகளை நமக்கு வழங்கியிருக்கிறார் என்றும், கொலை செய்யாதே என்பது, உனது சகோதரரை அவமதியாதே அல்லது சினங்கொள்ளாதே என்பதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், மேலுடையையும் கொடுங்கள் என்ற போதனை நம் இதயங்களைக் குணமாக்க உதவுகின்றது என்றார்.

அர்ஜென்டீனா நாட்டில் சர்வாதிகாரிகள் நரகத்திற்குப் போக வேண்டுமென்று மக்கள் செபித்தனர் என, தனது சிறுவயது அனுபவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கடவுள் நம் மனச்சாட்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கவும், நம் பகைவர்க்காகச் செபிக்கவும் அழைக்கிறார் என்று கூறினார்.

நம்மைப் புண்படுத்தும் மற்றும் நம்மைத் துன்புறுத்தும் தனிநபர்களுக்காகச் செபிக்கும் அருளை ஆண்டவர் நமக்கு அருள்வாராக என்று மறையுரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபம், ஒரு மனிதரை நல்லதொரு வாழ்வுக்கு மாற்றும், அது, நம்மை இறைத்தந்தையின் குழந்தைகளாக ஆக்கும் என்று கூறினார்.

மேலும்,“வருங்காலச் சமுதாயத்திற்கு, இளையோருக்கும், வயது முதிர்ந்தவர்க்கும் இடையே பலனுள்ள சந்திப்பு தேவைப்படுகின்றது”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.