2016-06-14 16:08:00

திருத்தந்தை - சிறாரைப் பாதுகாக்கும் முயற்சிக்கு பாராட்டு


ஜூன்,14,2016. பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறாரைப் பாதுகாப்பதற்குப் பயிற்சியளித்து வரும் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தினருக்குத் தனது பாராட்டைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையினர் நடத்தும் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், சிறாரைப் பாதுகாப்பது குறித்த சான்றிதழ் படிப்பை முடித்த 19 பேருக்கு இச்செவ்வாயன்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிகழ்வுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும், அதிலிருந்து சிறாரைப் பாதுகாக்கவும், இவ்வன்செயலால் பாதிக்கப்பட்டுள்ள சிறாரைக் குணப்படுத்தவும் இப்பல்கலைக்கழகம் எடுத்துவரும் பெரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும், நற்செய்தி அறிவிப்புத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி அவர்களும், கிரகோரியன் பல்கலைக்கழகத்தினருக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இச்செவ்வாயன்று நடந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழ்வில், திருப்பீடத்துக்கான ஜெர்மன் தூதர் Annette Schavan, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் ஜெர்மனியின் பிரதிநிதி Johannes-Wilhelm Rörig, தூய பேதுரு பாப்பிறை கழகப் பொதுச் செயலர் அருள்பணி Fernando Domingues MCCJ உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

2016ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தச் சான்றிதழ் படிப்பு முதன்முறையாகத் தொடங்கப்பட்டு, முதல் சான்றிதழ்களும் ஜூன் 14, இச்செவ்வாயன்று வழங்கப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் 18 முதல் 20 மாணவர்களுக்கு இதில் படிக்க வாய்ப்புண்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.