2016-06-14 17:02:00

இரத்தம், நம் அனைவரையும் இணைக்கின்றது


ஜூன்,14,2016. 'இரத்தம் அனைவரையும் இணைக்கிறது' என்ற மையக்கருத்துடன், இச்செவ்வயான்று உலக இரத்த தான தினம் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது.

இரத்த தானத்தின் அவசியம் மற்றும் பாதுகாப்பான இரத்தம் வழங்கப்படுவதை வலியுறுத்தி, 2004ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14ம் தேதியன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது 62 நாடுகள் மட்டுமே, தங்கள் நாடுகளுக்குத் தேவையான 100 விழுக்காடு இரத்தத்தை, தங்கள் நாடுகளிலே தன்னார்வலர்களிடமிருந்து இலவசமாகப் பெறுகின்றன. 34 நாடுகள் குடும்பத்தினரின் இரத்த தானத்தைச் சார்ந்துள்ளன.

உலகளவில் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 90 இலட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே கிடைக்கிறது. கடந்த 2015ல் உலகளவில் 10.8 கோடி பேர் இரத்த தானம் செய்தனர். இதில் சரிபாதி அதிக வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2004ல் ஒப்பிடும்போது இது 25 விழுக்காடு அதிகம்.

தானமாகக் கிடைக்கும் இரத்தம், குறைந்த வருமானம் உடைய நாடுகளில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 65 விழுக்காடு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அதிக வருமான உடைய நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 75 விழுக்காடு இரத்தம் பயன்படுத்தப்படுகிறது.

2020ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்கள் மூலமே 100 விழுக்காடு ரத்தத்தைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக நலவாழ்வு நிறுவனத்தின் இந்த இலக்கை மகராஷ்டிர மாநிலம் எட்டும் எனச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Agencies /தினமலர்/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.