2016-06-13 16:21:00

ஏழ்மையும், பசியும் இயல்பானது என்று நோக்கப்படக் கூடாது


ஜூன்,13,2016. ஏழ்மை, பசி என்ற சொற்களுக்குப் பின்னால், மனிதர் துன்புறுகின்றனர் என்பதை மறந்து, ஏழ்மையும், பசியும் இயல்பானது என்றும், இதைக் கோட்பாட்டு அளவிலும் நோக்கக் கூடாது என்று, WFP என்ற ஐ.நா.வின் உலக உணவு திட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு திருத்தந்தை என்ற முறையில், WFP நிறுவனத்திற்கு, முதன்முறையாகச் சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவை வர்த்தகமயமாக்கும் நிலையிலிருந்து நாம் கடந்து செல்ல வேண்டும், ஏனென்றால், இந்நிலை, இப்பூமியின் பலன்களின் கொடையை, உலகில், செல்வாக்குப்பெற்ற சிலருக்கு உரியதாக மாற்றியுள்ளது என்றும் உரையில் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவிகளும், வளர்ச்சித் திட்டங்களும், கருத்தியல் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தடைசெய்யப்படும்வேளை, ஆயுதங்கள், உலகின் பல பாகங்களில் முற்றிலும் சுதந்திரத்தோடு விநியோகம் செய்யப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இதன் விளைவாக, மனிதர்கள் அல்ல, போர்கள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

சில விவகாரங்களில், பசியே போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் கவலையோடு தெரிவித்த திருத்தந்தை, உலகில் பசியைப் போக்குவதற்கு, மேலும் அதிகமான தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

ஐ.நா.வின் உலக உணவு திட்ட நிறுவனத்தின் தலைமையலுவலகத்தை இத்திங்கள் காலையில் பார்வையிட்டு, அதன் செயல்திட்ட குழுவினர் 2016ம் ஆண்டின் அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். மேலும், அந்நிறுவனத்தினருக்கென தயாரித்திருந்த உரையை, தலைவர்களிடம் கொடுத்துவிட்டு, அந்நேரத்தில் மனதில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இத்திங்கள் காலை 9.30 மணிக்கு WFP நிறுவனம் சென்ற திருத்தந்தையை, அந்நிறுவன இயக்குனர் Ertharin Cousin, WFPன் 2016ம் ஆண்டின் இயக்குனர்கள் குழுத் தலைவர் Stephanie Hochstetter Skinner-Kle ஆகிய இருவரும் வரவேற்றனர். பணியின்போது உயிரிழந்த இந்நிறுவனப் பணியாளர்கள் நினைவுச் சுவரில் மலர்க்கொத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார் திருத்தந்தை. இம்மலர்களை இரு சிறார் திருத்தந்தையிடம் கொடுத்தனர். உலகில் பசியை முற்றிலும் போக்குவதற்கு தங்களின் திட்டங்கள், பரிந்துரைகள், செயல்பாடுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கென உலகின் பல ஆன்மீக, சமயப் பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் என பலர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை 11.45 மணியளவில் நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.