2016-06-13 16:37:00

WFPல் கர்தினால் டர்க்சன் - பசிக்கு எதிராகப் போராடுவோம்


ஜூன்,13,2016. “பசியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் துன்புறும் எல்லாரின் சார்பாக குரல் எழுப்புமாறு, உலகின் அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்ற வாரத்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இத்திங்களன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், உரோம் நகரில் ஐ.நா.வின் WFP உலக உணவு திட்ட அமைப்பு, உலகில் பசிப் பிரச்சனை குறித்து நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட, திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், “பசித்திருப்போருக்கு எதிராக அல்ல, பசிக்கு எதிராகப் போராடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்,

உலகில் பசி என்பது, மிக நிதர்சனமான உண்மை, இதை நாம் அனுபவித்திருக்கின்றோம் அல்லது இது குறித்து அறிந்திருக்கின்றோம், உலகில் இலட்சக்கணக்கான மனிதர்கள், தங்கள் உடல், உள்ள மற்றும் ஆன்மாவுக்குத் தேவையான ஊட்டச்சத்து இன்றி உள்ளனர் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், உணவு, கடவுளின் கொடையாக ஏற்கப்படும்போது, அது பிட்டு, பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும், கர்தினால் டர்க்சன் அவர்களும், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும், இணைந்து, பசிக்கு எதிரான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

2030ம் ஆண்டுக்குள் உலகில் எவருமே பசியால் வாடக் கூடாது என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில், இஞ்ஞாயிறு, இத்திங்கள் தினங்களில் நடைபெற்ற இந்த ஐ.நா. கூட்டத்தில் உலகின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

WFP உலக உணவு திட்ட அமைப்பின் இயக்குனர் Ertharin Cousin அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் இக்கூட்டத்தில் உரையாற்றினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.