2016-06-11 17:01:00

சிறார் தொழில்முறையை ஒழிப்பது ஒவ்வொருவரின் கடமை


ஜூன்,11,2016. உலகில், பொருள்கள் விநியோகச் சந்தையில், சிறார் தொழில்முறை பரவலாக இடம்பெற்றுவரும்வேளை, இத்தொழில்முறை இல்லாத ஓர் எதிர்காலத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் பணியாகும் என்று, ILO உலக தொழில் நிறுவன இயக்குனர்  Guy Ryde அவர்கள் கூறியுள்ளார்.

ஜூன் 12, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், உலக சிறார் தொழில்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு வலியுறுத்தியுள்ள Ryde அவர்கள், உலகில் இன்றும் 16 கோடியே 80 இலட்சம் சிறார் தொழிலாளர் இருப்பதும், இவர்களில் 8 கோடியே 50 இலட்சம் சிறார், ஆபத்தான வேலைகளைச் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலாக்கள், என, இலட்சக்கணக்கான சிறார் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் எனவும், கிராமப்புறங்களைத் தவிர, தேசிய மற்றும் உலக அளவில் உற்பத்திப் பொருள்களை விநியோகம் செய்வதிலும் சிறார் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் ILO இயக்குனர் கூறியுள்ளார்.

2030ம் ஆண்டின் ஐ.நா. வளர்ச்சித் திட்ட இலக்குகளில் சிறார் தொழில்முறை ஒழிப்பும் ஒன்றாகும். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.