2016-06-11 17:16:00

காபூலில் கடத்தப்பட்டுள்ள இந்திய தன்னார்வலர்க்காகச் செபம்


ஜூன்,11,2016. ஆப்கானிஸ்தானின் காபூலில் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டுள்ள இந்திய கத்தோலிக்கத் தன்னார்வலப் பணியாளர் ஜூடித் டி சூசா அவர்கள், விரைவில் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்ப வேண்டுமென்று செபிப்பதாகத் தெரிவித்தார் கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா.

ஆப்கானிஸ்தானில், இஸ்லாம் மற்றும் அந்நாட்டின் உறுதியான குலமுதுவர் மரபுகளுக்கு எதிராக நடைபெறும் சில நடவடிக்கைகள் பற்றியும், பெண்களின் பங்கு குறித்தும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு, Agha Khan என்ற தன்னார்வ அமைப்பில் இணைந்து பணியாற்றிய நாற்பது வயது நிரம்பிய ஜூடித் டி சூசா அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்.

துன்பநிலைகளில் வாழும் பலரின் வாழ்வை முன்னேற்றுவதில் ஈடுபட்டுவந்த இந்தக் கத்தோலிக்கப் பணியாளர் விடுவிக்கப்பட செபிக்கவும், அவரின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார் பேராயர் தாமஸ் டி சூசா.

இதற்கிடையே, ஜூடித் டி சூசா அவர்களின் விடுதலைக்காக, இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருவதாக, காபூலிலுள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.