2016-06-11 16:55:00

எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்கும் உலகம் சலிப்படைய வைக்கும்


ஜூன்,11,2016. உலகில் எல்லாரும் ஒரே மாதிரியாக இருந்தால், அத்தகைய உலகம் சலிப்படைய வைக்கும் என்று, இத்தாலிய ஆயர் பேரவை நடத்திய மாற்றுத்திறனாளிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, இத்தாலிய தேசிய மறைக்கல்வி அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்திய மநாட்டில் கலந்து கொண்ட 650 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

மாற்றுத்திறனாளிகள், தங்களின் கிறிஸ்தவ வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, சில நோய்கள் காரணமாக, பல்வேறு விதங்களில் மக்கள் இருப்பது வேதனையளித்தாலும், இந்தப் பன்மைத் தன்மை நமக்குச் சவாலாகவும், நம்மை வளப்படுத்துவதாகவும் உள்ளது என்றும் கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் மறைக்கல்வி அலுவலகம் தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளவேளை, மாற்றுத்திறனாளிகள்  பங்குகளிலும், கழகங்களிலும், திருஅவை இயக்கங்களிலும் முழுமையாய் வரவேற்கப்படுவதற்கு இந்த அலுவலகம் தன்னை அர்ப்பணித்துச் செயல்படுவதைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாற்றுத்திறன் உடைய மக்கள், சிலவேளைகளில், தங்கள் பங்குத்தளங்களில் எல்லாராலும்  வரவேற்கப்படுவதில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, பாகுபாடுகளுக்கு உட்படுவது வேதனையளிக்கிறது என்றும் கூறினார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, இவ்வெள்ளியன்று தொடங்கிய வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழா, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியோடு நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.