2016-06-11 17:09:00

இலங்கை உள்நாட்டுப் போரில் 65,000 காணாமல்போனவர்கள்


ஜூன்,11,2016. இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் காணாமல்போனவர்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும் மசோதாவுக்கு, இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

1994ம் ஆண்டிலிருந்து, 65 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் காணாமல்போயுள்ளார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ளபோதிலும், இப்புகார்களை முறைப்படி விசாரிப்பதற்கு, குறிப்பிட்ட அலுவலகம் இல்லாமல் இருந்ததால், இவை ஏற்கப்படாமலே இருந்தன.

இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி ஸ்ரீசேனா அவர்கள், கடந்த மே மாத இறுதியில், இவ்விவகாரம் தொடர்பாக, புதிய அலுவலகம் ஒன்று உருவாக்கப்படுவதற்குரிய மசோதாவை முன்வைத்தார். 

அரசுத்தலைவர் முன்வைத்த இந்த மசோதா, இந்த ஜூன் 7ம் தேதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்த குறைந்தது 40 ஆயிரம் பேர் உட்பட, அப்போரில், ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இறந்தனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுவதாக ஆசியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.