2016-06-11 10:24:00

இது இரக்கத்தின் காலம் – மன்னிப்பு என்ற அருவியில்.........


மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள்:

கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு, எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.

நாம் பாவங்கள் புரியும்போது என்ன செய்கிறோம்? கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம். துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக் கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில் முடிச்சு விழும்போது, அதன் நீளம் குறைகிறது. நாமும், இறைவனும் நெருங்கி வருகிறோம்.

மன்னிப்பைப் பற்றிய இரு உருவகங்கள்:

இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால், குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னே விழும். அந்த ஒளியிலிருந்து திரும்பி, அந்த ஒளியை விட்டு விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை வழிநடத்தும்.

சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும் அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால், பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும் நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து, வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து வைக்காமல், கவிழ்த்து  வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது. நிறையாது.

மன்னிப்பு பற்றிய பாடங்களைப் பயில, இரக்கத்தின் காலம் நம்மை அழைக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.