2016-06-11 17:02:00

HIV சிறாரில் 50% இரண்டு வயதுக்கு முன்னரே மரணம்


ஜூன்,11,2016. HIV மற்றும் எய்ட்ஸ் நோயுடைய சிறாரில் ஐம்பது விழுக்காட்டினர், இரண்டு வயதை எட்டும் முன்னரே இறந்து விடுகின்றனர் என்று, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

HIV மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய ஐ.நா. உயர்மட்ட கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், இந்நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்க்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததால், அவர்கள் தங்களின் இரண்டாவது பிறந்த நாளுக்குள்ளே இறக்கின்றனர் என்று கூறினார்.

உண்மையில், இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ள சிறாரில் பலர், நான்கு வயதுவரை இந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் உரையாற்றிய பேராயர், இவ்விவகாரம் குறித்து, வத்திக்கான் மருந்து  நிறுவனங்களைக் கொண்டு கூட்டங்களை நடத்துகின்றது என்றும் அறிவித்தார்.

மேலும், அமைதிகாக்கும் தளங்களில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது குறித்த ஐ.நா. பாதுகாப்பு அவை உரையாடலிலும் இவ்வெள்ளியன்று பேசிய பேராயர் அவுசா அவர்கள், அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அப்பாவி மக்களை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி ஆயுத உற்பத்தியையும், விற்பனையையும், விநியோகத்தையும் கட்டுப்படுத்தவும் விண்ணப்பித்தார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.