2016-06-09 13:29:00

நேர்காணல்–தேவசகாயம் பிள்ளையை புனிதராக அறிவிக்கும் முயற்சிகள்


ஜூன்,09,2016. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், விளவன்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட நட்டாலம் மண்ணில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலகண்டபிள்ளை என்பதாகும். பல மொழிகளையும், சிலம்படி, கலரி, போர்ப்பயிற்சி போன்ற பல வீரக்கலைகளையும் கற்றிருந்த நீலகண்டபிள்ளை, 1740ம் தனது 28ம் வயதில் இராணுவத்தின் துணைத் தளபதிக்கு இணையான நிதிக்காப்பாளராக அரசுப்பணியில் சேர்ந்தார். பின்னர் நெய்யூர் பேரூராட்சிக்குட்ப்பட்ட மேக்கோடு கிராமத்தை சேர்ந்த பார்கவி அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். 1741 ஜூலை 21ல் டச்சுப்படைகளையும் திருவிதாங்கூர் படைகளையும் போர் நடைப்பெற்றது. போரில் டச்சுத்தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டார். பின்னர் டிலனாய் நீலகண்ட பிள்ளையின் நண்பராகி கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி எடுத்துரைத்தார். குடும்பம் பல்வேறு துன்பங்கள், இழப்புகளுக்கு ஆளாகிய சூழலில் கிறிஸ்தவ மறையை தழுவினார் நீலகண்டபிள்ளை.1745, மே 14ம் நாள் வடக்கன்குளம் திருக்குடும்ப திருக்கோவிலில் பணி. ஜாண் பாப்டிஸ்ட் புட்டாரி திருமுழுக்கு வழங்கி அவருக்கு இலாசர் என்ற பெயரைச் சூட்டினார். இப்பெயரின் தமிழாக்கம் தான் தேவசகாயம் பிள்ளை. சில மாதங்களில் தேவசகாயம் பிள்ளையின் துணைவியார் பார்கவி அம்மாவும் திரேசம்மா எனும் பெயர் தாங்கி திருமுழுக்கு பெற்றார். ஞானப்பூ என்பது அதன் பொருள். அவரது மனமாற்றம் கண்டு குடும்பத்தார் சீற்றம் கொண்டனர். நான்கு ஆண்டுகால கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பின் 1749-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி கைது செயப்பட்டு 11 மாதங்கள் திருவிதாங்கூர் தலைமைச் சிறையில் அடைக்கப்பட்டார் தேவசகாயம் பிள்ளை. 1750, நவம்பர் மாதம் வில்லுகுறியை அடுத்த குளிமைகாட்டிற்கு அருகேயுள்ள அப்பட்டுவிளை குளிச்சிமாவிளையில் வைத்து அவரது தலையை வெட்டி எடுக்க மன்னர் உத்தரவிட்டார். பின்னர் அவரை கால்நடையாகப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவன்கோடு, நெய்யற்றின்கரை, நெடுமங்காடு, சிறையின்கீழ், திருவனந்தபுரம் ஆகிய தாலுகாக்களின் அதிகாரிகள் அவரை விசாரணைக்கும், தண்டனைக்கும் உட்படுத்தினர். எனினும் தேவசகாயம் பிள்ளை தம் நம்பிக்கையில் தளரவில்லை. சுண்ணாம்பு சூளையில் இட்டனர். காயங்களில் மிளகாய் தூள் தூவினர். எருமை மாட்டின் மேல் ஏற்றி நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சென்றனர். பாம்பு, தேள்களோடு படுத்துறங்க வைத்தனர். மரப்பேழையில் அடைத்து எறும்புகளைக் கடிக்க வைத்தனர். கல் தூணில் கட்டி வைத்து அடித்தனர். எல்லா துன்பங்களுக்கும் தேவசகாயம் பிள்ளையின் நம்பிக்கையை உறுதிபடுத்தவே செய்தன. சுட்டுக் கொல்லப்படுவதற்காக ஆரல்வாய்மொழிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் புலியூற்குறிச்சியில் முட்டூன்றி செபித்தார். அந்த இடத்தில் நீருற்று புறப்பட்டது. 1752, ஜனவரி 14ம் நாள் ஆரல்வாய்மொழியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் கோட்டாறு கோயிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பொதுநிலை மறைசாட்சியான, தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, அருளாளராக அறிவிக்கப்பட்டார். அவரைப் புனிதராக அறிவிப்பதற்கு, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்த ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களிடம், இந்த முயற்சி பற்றிக் கேட்டோம். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.