2016-06-08 18:04:00

தாய்-குழந்தை HIV தொற்றை நீக்கிய முதல் ஆசிய நாடு


ஜூன்,08,2016. தாயின் மூலம் குழந்தைக்குப் பரவும் HIV நோய்க் கிருமிகள் தொற்றினை நீக்கிய முதல் ஆசிய நாடு, தாய்லாந்து என்று உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) இச்செவ்வாயன்று தெரிவித்தது.

தாய்லாந்தில், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, கருவுற்ற பெண்களுக்கு, HIV நோய்க் கிருமி பரிசோதனை நடத்துவதில், தாய்லாந்து நாடு பெருமளவில் வெற்றி கண்டுள்ளது என்றும், WHO நிறுவனம் அறிவித்துள்ளது.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு, HIV நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, HIV நோய்க் கிருமியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, வழக்கமான HIV சோதனை மற்றும் இலவச மருத்துவ சேவை வழங்குவது முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.

HIV தொற்றினால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு HIV நோய்க் கிருமி பரவ, 45 விழுக்காடு வாய்ப்புள்ளது. ஆனால், அவர்களுக்கு மருந்தளிக்கப்பட்டால், இந்த நோய்க் கிருமி பரவும் ஆபத்து ஒரு விழுக்காடாக குறையும்.

தாய்லாந்து நலவாழ்வு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, 2000மாம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை, 15 ஆயிரத்திலிருந்து ஒன்பதாயிரமாக, அதாவது 87 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், யூனிசெப் நிறுவனத்தின் மாநில இயக்குனர்    Karin Hulshof அவர்களின் கணிப்புப்படி, தாய்லாந்து நாடு இருக்கின்ற பகுதியில், ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 21 ஆயிரம் குழந்தைகள் HIV நோய்க் கிருமிகளுடன் பிறக்கின்றனர். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.