2016-06-08 17:45:00

எருசலேம் இலத்தீன் முதுபெரும் தந்தையின் இரமதான் வாழ்த்து


ஜூன்,08,2016. இவ்வாரத்தில் இரமதான் புனித மாதத்தைத் தொடங்கியுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்வு கொண்ட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.

                                                                              

இது குறித்து இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோன்பு மற்றும் செப மாதமாகிய இம்மாதத்தில், உலகின் முஸ்லிம்கள் எல்லாருக்கும், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Twal அவர்கள், விசுவாசிகளுடன் இணைந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

வன்முறையால் மலிந்துள்ள மத்திய கிழக்கில், ஒவ்வொரு மனிதரும் பிறரை மதிக்கவும், கலாச்சாரங்களின் தொட்டிலாகிய இப்பகுதியில், காழ்ப்புணர்வுகளுக்கும், அநீதிகளுக்கும் இடமற்றுப் போகவும் கடவுளிடம் செபிப்பதாகக் கூறும் அவ்வறிக்கை, காழ்ப்புணர்வுகளையும், அநீதிகளையும் களைவதில் மக்கள் துணிச்சலுடன் செயல்பட கடவுள் உதவுவாராக என்றும் கூறுகிறது.

பல ஆண்டுகளாகச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக் போர், அரசியல் மாற்றத்தில் கடினமான சூழலை எதிர்நோக்கும் எகிப்து, பெருமளவான புலம்பெயர்ந்த மக்களால் திணறும் ஜோர்டான், லெபனான், புனித பூமியில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்கள் போன்றவை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்  முதுபெரும் தந்தை Fouad Twal.

மத்திய கிழக்கில், போரின் ஆயுதங்களை மௌனப்படுத்தவும், அமைதியைக் கொண்டுவரவும் எடுக்கப்பட்டுவரும் அரசியல், மனிதாபிமான மற்றும் மதங்களின் முயற்சிகளுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார் எருசலேம் முதுபெரும் தந்தை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.