2016-06-08 17:26:00

C9 கர்தினால்கள் அவையின் 15வது கூட்டம்


ஜூன்,08,2016. திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் “C9” என்ற கர்தினால்கள் அவையின் 15வது மூன்று நாள் கூட்டம் இப்புதனன்று வத்திக்கானில் நிறைவடைந்தது. இக்கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, திருப்பீடச் செய்தித் தொடர்பக இயக்குனர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளுக்கு, புதிய அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பு உருவாக்குவது பற்றி, இக்கூட்டத்திலும் பேசப்பட்டன என்று தெரிவித்தார். குறிப்பாக, ஆயர்கள் திருப்பேராயம், திருப்பீடச் செயலகம், கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயம், கத்தோலிக்க கல்வி திருப்பேராயம், அருள்பணியாளர் திருப்பேராயம், திருப்பீட கலாச்சார அவை, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை, திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஆகியவைகளுக்கு, புதிய அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பு உருவாக்குவது பற்றிப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

“C9” என்ற கர்தினால்கள் அவையின் அடுத்த கூட்டங்கள், வருகிற செப்டம்பர் 12 முதல் 14 வரையும், டிசம்பர் 12 முதல் 14 வரையும் நடைபெறும். இதற்கு முந்தைய 14வது கூட்டம், கடந்த ஏப்ரல் 11 முதல் 13 வரை நடைபெற்றது.

மேலும், சிறார் மற்றும் வயதுவந்தோரை, பாலியல் உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பதற்குத் தவறும் துறவு சபைத் தலைவர்கள் அல்லது ஆயர்களை, நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானிப்பதற்கு உதவுவதற்கென, சட்ட வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை, திருத்தந்தை உருவாக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் நிர்வாகத்தின்கீழுள்ள நபர்களை, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் கவனக்குறைவாக இருக்கும் துறவு சபைத் தலைவர்கள் அல்லது ஆயர்களை, பணிநீக்கம் செய்வது குறித்து, திருப்பீட அவைகள் விசாரணை நடத்தும். அதேநேரம், அவர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்த இறுதித் தீர்மானத்தை திருத்தந்தையே எடுப்பார். இதில், திருத்தந்தை நியமித்துள்ள, சட்ட வல்லுனர்கள் குழு திருத்தந்தைக்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.