2016-06-07 15:57:00

இரமதான் காலத்தில் இரக்கம் மற்றும் ஒப்புரவுக்கு அழைப்பு


ஜூன்,07,2016. இரமதான் புனித மாதம், கருணை மற்றும் அன்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்று, ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், முஸ்லிம்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்திங்களன்று, இரமதான் புனித மாதத்தைத் தொடங்கியுள்ள முஸ்லிம்களுக்கென கடிதம் எழுதியுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், பிரிவினை மற்றும் அடிப்படைவாதத்தைக் கைவிட்டு, ஒப்புரவு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும், உடன்வாழ்வோருடன் சகிப்புத்தன்மை விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளவும், இந்த இரமதான் மாதத்தை, தனிச் சிறப்புமிக்க மாதமாக அமைக்குமாறு முஸ்லிம்களைக் கேட்டுள்ளார்.

கவலைதரும் சூழல்கள் நிறைந்துள்ள ஈராக்கில் இடம்பெறும் கொலைகள், அழிவுகள் மற்றும் புலம்பெயர்வுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ள முதுபெரும் தந்தை, இந்தப் புனிதக் காலத்தில், இஸ்லாமிய அரசு ஆக்ரமித்துள்ள பகுதிகள் விடுவிக்கப்பட்ட இடங்களாக மாறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோர்டான் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், இந்த இரமதான் மாதத்தில், இலவச உணவு வழங்கவும், இரண்டாயிரம் ஜோர்டானியக் குடும்பங்களுக்கு, உணவுப்பொருள்களையும், நலவாழ்வுக்குத் தேவையானவைகளையும் அளிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.

இஸ்லாம், இரக்கம், கருணை, அன்பு மற்றும் மிதவாத மதம் என்றும், இம்மதம், அமைதி, மற்றும் நீதிக்கு அழைப்பு விடுத்து, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் புறக்கணிக்கின்றது என்றும், சவுதி மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார் சவுதி அரசர் சல்மான்.

ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.