2016-06-06 16:57:00

விவசாயிகளுக்கு இலவசமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள்


ஜூன்,06,2016. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 05, இஞ்ஞாயிறன்று, விவசாயிகளுக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளார் தமிழகத்தின் பேருந்து ஓட்டுனர் ஒருவர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் தேசிய நெல் திருவிழாவின் நிறைவு நாளில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, அரசுப் பேருந்து ஓட்டுநர் கருணாநிதி அவர்கள், 2 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நடும் முறை மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கினார்.

இயற்கையின் மீதும், மரங்கள் மீதும் பற்று கொண்ட கருணாநிதி, தனது பெயருக்கு முன் மரம் என்பதை சேர்த்துக்கொண்டு, தன்னை ‘மரம் கருணாநிதி’ என்றே அழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் இவர், தனது சொந்த செலவில் 1,000 மரக்கன்றுகளை வாங்கி, அந்த விழாக்களுக்கு வருபவர்களுக்கு வழங்குகிறார்.

இவ்வாறு ஏறத்தாழ 7 இலட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளதாகக் கூறும் கருணாநிதி, தனது வாழ்நாளில் 100 கோடி மரக்கன்றுகளை வழங்குவதே இலட்சியம் என்கிறார்.

பிறந்த மண்ணுக்குப் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக, மரக்கன்றுகளை நடத் தொடங்கினேன். நான் சம்பாதிப்பதில் பாதித்தொகையை மரக்கன்றுகளுக்காகச் செலவிடுகிறேன். சந்தனம், வேங்கை, செண்பகம், மனோரஞ்சிதம், செம்மரம், மகிழம், மா, பலா உள்ளிட்ட உயர்ந்த வகை மரக்கன்றுகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறேன். நான் இலவமாக மரக்கன்றுகளை வழங்குவதையறிந்த நர்சரி உரிமையாளர்கள், குறைந்த விலையில் மரக்கன்றுகளை வழங்கி என்னை ஊக்குவிக்கின்றனர் என்று கூறுகிறார் மரம் கருணாநிதி.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.