2016-06-06 16:04:00

மலைப்பொழிவு கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில் வழிநடத்துகின்றது


ஜூன்,06,2016. பேராசை, தற்பெருமை மற்றும் தன்னலத்தின் பாதைகளை விலக்கி வாழும்பொருட்டு, கிறிஸ்தவர்கள், இயேசுவின் மலைப்பொழிவுப் போதனைகளைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தேயு நற்செய்தியின் இயேசுவின் மலைப்பொழிவுப் பகுதியை, தன் மறையுரைக்குச் சிந்தனையாக எடுத்துக்கொண்டு பேசினார்.

கிறிஸ்தவ வாழ்வுப் பாதையில் சுடர்விடும் வழிகாட்டிகளாக, இயேசுவின் பேறுபெற்றோர் மலைப்பொழிவுப் போதனைகள் பயன்படுத்தப்படலாம் என்றுரைத்த  திருத்தந்தை, லூக்கா நற்செய்தியாளர், இயேசுவின் மலைப்பொழிவு பற்றிச் சொல்லும்போது, நான்கு ஐயோ கேடுகள் பற்றிச் சொல்வதையும் குறிப்பிட்டார்.

செல்வங்கள் நல்லதே, ஆனால் செல்வத்தின்மீது பற்றுக்கொள்வதே, சிலைவழிபாடாக மாறுகிறது என்றும், தற்பெருமை கொள்வது, ஒருவரை முக்கியமானவராக உணரச் செய்கின்றது மற்றும் தான் சரியான பாதையில் செல்வதாக உறுதியளிக்கின்றது   என்றும் கூறினார் திருத்தந்தை.

இறுமாப்பு கொள்வதன் ஆபத்து பற்றியும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நான் இதயத்தில் தாழ்ச்சியுள்ளவர் என்று இயேசு சொல்வதை நினைவுபடுத்தி, தாழ்மையுள்ள இதயம், இயேசுவுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.