2016-06-06 16:11:00

புதிய புனிதர்கள் உயிர்ப்பின் சக்தியை வெளிப்படுத்துகின்றனர்


ஜூன்,06,2016. இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தோடு எவ்வாறு ஒருவர் தன்னை ஒன்றிணைக்க வேண்டும் என்பது பற்றியும், இயேசுவின் உயிர்ப்பின் சக்தியையும்,  இரு புதிய புனிதர்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், அருளாளர்கள் இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ், மரிய எலிசபெத் ஹெசெல்பிளாட் ஆகிய இருவருக்கும்  புனிதர் பட்டமளிப்புத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு புதிய புனிதர்களும், கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றும், சோதனைகள் மத்தியில் விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்கள் என்றும் பாராட்டினார்.

நம் துன்ப, சோதனை நேரங்களில், கிறிஸ்துவின் திருப்பாடுகளில் அதற்குரியப் பதிலைக் காண்கிறோம் என்றும் கூறிய திருத்தந்தை, நாம் துன்பங்களிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது, ஆனால், சிலுவையடியில் நின்ற அன்னை மரியாவைப் போன்று, நாமும் சிலுவையடியில் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இயேசுவோடு துன்பம் அனுபவித்த அன்னை மரியா, நம்பிக்கை பெறும் அருளைப் பெற்றார் என்றுரைத்த திருத்தந்தை, இதுவே, புனிதர்கள் இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ், மரிய எலிசபெத் ஹெசெல்பிளாட் ஆகிய இருவரின் அனுபவமாக இருந்தது என்றும் கூறினார்.

இவ்விரு புனிதர்களும், இயேசுவின் திருப்பாடுகளோடு மிக ஆழமாக ஒன்றித்திருந்தார்கள் மற்றும் இவ்விருவரில் இயேசுவின் உயிர்ப்பின் வல்லமை வெளிப்படுத்தப்பட்டது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1631ம் ஆண்டில் போலந்தில் பிறந்த Jan Papczyński என்ற புனித இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ் அவர்கள், 1661ம் ஆண்டில் பியாரிஸ்ட் சபையில் குருவானார். அமலமரியின் அருள்பணியாளர்கள் சபையைத் தொடங்குவதற்காக இவர் அச்சபையைவிட்டு விலகினார்.

சுவீடன் நாட்டவரான புனித மரிய எலிசபெத் ஹெசெல்பிளாட் (Maria Elisabeth Hesselblad) கத்தோலிக்கத்திற்கு மனம் மாறியவர். சுவீடன் நாட்டுப் பாதுகாவலரும், பெண்கள் துறவு சபை ஒன்றை முதலில் ஆரம்பித்தவருமான புனித பிரிஜிட் தொடங்கிய சபையை, புனித பிரிஜிட்டின் மீட்பர் என்ற பெயரில், 20ம் நூற்றாண்டில் மீண்டும் இவர் தொடங்கினார். இச்சபையினர், Bridgettine சகோதரிகள் என அழைக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.