2016-06-06 16:39:00

உலக பெருங்கடல்களைப் பாதுகாத்துப் பேணுவோம்


ஜூன்,06,2016. நம்மைப் படைத்தவராம் இறைவனின் மிகச் சிறந்த கொடைகளில் ஒன்றான பெருங்கடல்களைப் பாதுகாத்துப் பேணுவதற்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

ஜூன் 08, வருகிற புதனன்று கடைப்பிடிக்கப்படும் உலகப் பெருங்கடல்கள் நாளை முன்னிட்டு, நிலத்தையோ, கடலையோ, மரத்தையோ அழிக்க வேண்டாம்(தி.வெளி.7.3) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் பெருங்கடல்கள் மிக மோசமான நிலையை அடைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி, பெருங்கடல்களில் கலந்து, நீரின் அமிலத் தன்மையை அதிகரித்து வருகின்றது என்றும், இதனால் பவளப் பாறைகளும், பெருங்கடல்களின் அடியிலுள்ள உணவுப்பொருள்களும், சங்குவகை மீன்களும் அழிக்கப்படுகின்றன என்றும் செய்தியில் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

நாம் இப்போது எதிர்நோக்கும் சேதங்களை உருவாக்கியது நாம் என்பதால், இதனைச் சரிசெய்ய வேண்டியதும் நமது கடமை என்றும் வலியுறுத்துகிறது முதுபெரும் தந்தையின் செய்தி.

நலமான பெருங்கடல்கள், நலமான பூமி என்ற தலைப்பில் 2016ம் ஆண்டின் உலக பெருங்கடல்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.