2016-06-04 16:54:00

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு புதிய திருப்பீட அவை


ஜூன்,04,2016. பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு என்ற புதிய திருப்பீட அவையை, ஜூன் 04, இச்சனிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால்கள் ஆலோசனை அவையின் பரிந்துரையின் பேரில், பரிசோதனை முறையில்(Ad Experimentum)  திருத்தந்தை உருவாக்கியுள்ள இப்புதிய திருப்பீட அவை, வருகிற செப்டம்பர் முதல் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கும். இதே நாளில், திருப்பீட பொதுநிலையினர் அவை மற்றும் குடும்ப அவையின் பணிகள் நிறுத்தப்படும்.

தற்போதுள்ள திருப்பீட பொதுநிலையினர் அவையும், குடும்ப அவையும் ஒன்றாக இணைக்கப்பட்டு இப்புதிய அவை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், “வீடின்றி துன்புறும் குடும்பம், குழந்தைப்பருவமின்றி துன்புறும் குழந்தை ஆகியோரின் துன்பங்களையும், இவற்றுக்குப் பலியாகுபவரின் அழுகுரல்களையும் நாம் கேட்போம்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

இன்னும், ஜூன் 05, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அருளாளர்கள் இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ், மரிய எலிசபெத் ஹெசெல்பிளாட் ஆகிய இருவருக்கும் புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமலமரியின் அருள்பணியாளர்கள் சபையை ஆரம்பித்தவரும், மாபெரும் எழுத்தாளருமான அருளாளர் இயேசு மரியின் ஸ்தனிஸ்லாஸ், கடவுளின் இரக்கத்தையும், அவரின் வழிகாட்டுதலையும் தியானிப்பதற்கு உலகுக்கு உந்துதல் அளித்தவர். 1631ம் ஆண்டில் போலந்தில் பிறந்த இவர், 1661ம் ஆண்டில் குருவானார். 1670ம் ஆண்டில் கடவுளுக்கும், அமலமரிக்கும் தன்னை அர்ப்பணித்து, கடவுளின் இரக்கத்தையும் அமலமரி பக்தியையும் பரப்புவதற்கு வாக்குறுதியளித்து புதிய சபையைத் தொடங்கினார். இவர் 1701ம் ஆண்டில் காலமானார்.

சுவீடன் நாட்டவரான அருளாளர் மரிய எலிசபெத் ஹெசெல்பிளாட் (Maria Elisabeth Hesselblad) கத்தோலிக்கத்திற்கு மனம் மாறியவர். செவிலியரான இவர், Bridgettine சகோதரிகள் என அழைக்கப்படும் புனித பிரிஜிட்டின் மீட்பர் சபையைத் தொடங்கியவர். கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் வறுமையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் பணியாற்றினார். 1957ம் ஆண்டில் உரோமையில் காலமான இவர், 2000மாம் ஆண்டில் அருளாளராக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.