2016-06-04 16:31:00

திருத்தந்தை, கத்தார் Sheikha Moza bint Nasser சந்திப்பு


ஜூன்,04,2016. கத்தார் நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராகிய Sheikha Moza bint Nasser அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

முப்பது நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவில், கல்வி மற்றும் சமுதாய வளர்ச்சியில் தான் ஆற்றிவரும் பல்வேறு நடவடிக்கைகள், இன்னும், போர்கள் இடம்பெறும் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளின் நெருக்கடியான சூழல் போன்றவை குறித்து Moza bint Nasser அவர்கள், திருத்தந்தையிடம் கூறியதாகவும், திருத்தந்தை, அவரை ஊக்கப்படுத்தியதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

மேலும், 18ம் நூற்றாண்டில், துருக்கியின் ஒட்டமான் காலத்தில் தயாரிக்கப்பட்ட, 123 பக்கங்கள் கொண்ட, அழகான வேலைப்பாடுகள் நிறைந்த, மதிப்புமிக்க, அராபிய நற்செய்தி கையெழுத்துப் பிரதியைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார் Sheikha Moza bint Nasser. திருத்தந்தையும், அமைதியைக் குறிக்கும் ஒலிவமரப் பதக்கத்தையும், இறைவா உமக்கே புகழ் என்ற Laudato si’ திருமடலின் அரபுமொழிப் பிரதியையும் பரிசாக அளித்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Michael F. Crotty ஆகிய இருவரையும் சந்தித்தார் Sheikha Moza bint Nasser. கத்தாரிலுள்ள கத்தோலிக்க சமுதாயம் பற்றியும் இவர்கள் கலந்துரையாடினர். 

பின்னர், வத்திக்கான் மாளிகையின் “Raphael Wing”ல், வத்திக்கான் அப்போஸ்தலிக்க நூலகத்திற்கும், கத்தார் தேசிய நூலகத்தின் சார்பாக, கத்தார் நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது. கத்தார் நிறுவனத்தின் சார்பில் Hamad Al Kuwari அவர்களும், அப்போஸ்தலிக்க நூலகத்தின் சார்பில் அதன் தலைவர் பேரருள்திரு Cesare Pasini அவர்களும் கையெழுத்திட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.