2016-06-04 17:24:00

இரு வயதான மாற்றுத் திறனாளிகளுக்கு மின்சார ஸ்கூட்டர்


ஜூன்,04,2016. உரோம் மாநகரின் புறநகர்ப் பகுதியில் வாழும் இரு வயதான மாற்றுத் திறனாளிகளுக்கு மின்சார ஸ்கூட்டரை இச்சனிக்கிழமையன்று வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் வீட்டைவிட்டு வெளியே வர இயலாமல் துன்புறும் Tor Bella Monaca வயதான தம்பதியர் பற்றிக் கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தம்பதியர் வெளியில் வருவதற்கு உதவியாக, தனது தர்மச் செயல்களை ஆற்றும் பேராயர் Konrad Krajewski அவர்கள் வழியாக இந்தக் ஸ்கூட்டரை அளித்துள்ளார்.

இத்தம்பதியருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவரும் இத்தாலிய Medicina Solidale என்ற தன்னார்வ அமைப்பால், இவர்களில் ஒருவருக்கு, சர்க்கரை நோய் காரணமாக, அண்மையில் கால் வெட்டப்பட்டு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இத்தம்பதியருக்கு, மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு, நிதி திரட்டும் ஒருமைப்பாட்டு நடவடிக்கையை, இந்த அமைப்பு தொடங்கவிருந்த நிலையில், திருத்தந்தை இதனை அளித்துள்ளார்.

இவ்வுதவி குறித்துக் கூறிய Medicina Solidale அமைப்பின் இயக்குனர் Lucia Ercoli அவர்கள், மருந்துகள், உணவுப்பொருள்கள் போன்றவைகளை வழங்கிவரும் திருத்தந்தை, மின்சார ஸ்கூட்டர் அளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்றார்.

ஆதாரம் : ANSA/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.