2016-06-04 16:44:00

ஆயர்களின் பணிநீக்கம் பற்றிய Motu proprio அறிக்கை


ஜூன்,04,2016. தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு, கடும் பாதிப்பை ஏற்படுத்தும் விவகாரங்களில், கவனக்குறைவாக இருக்கும், அல்லது அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆயர்களை, நிர்வாகப் பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்ட விதிமுறைகளை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“அன்பான அன்னையாக(Come una madre amorevole)” என்ற தலைப்பில், தனது சொந்த விருப்பத்தின்பேரில் என்ற Motu proprio திருத்தூது அறிக்கையின் வழியாக இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையின் இவ்விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஆயர்கள், பாலியல் குற்ற விவகாரத்தைக் கையாள்வதில் கவனக்குறைவாய் இருக்கின்றனர் என்பதைத் திருப்பீடம் கண்டுபிடித்தால், அத்தகைய ஆயர்களைப் பணிநீக்கம் செய்யவும் இவ்விதிமுறை அனுமதிக்கின்றது.

கடுமையான காரணங்களுக்காக, ஓர் ஆயர், பணிநீக்கம் செய்யப்படுவதை அனுமதிக்கும் திருஅவை சட்டம் ஏற்கனவே உள்ளது எனினும், கவனமின்றி, குறிப்பாக, பாலியல் குற்ற விவகாரத்தைக் கையாள்வதில் அக்கறையின்றி இருப்பது பதவியிழப்புக்கு இட்டுச்செல்லும் என்பதை, தான் தெளிவாகக் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

தங்களின் மந்தையில் மிகவும் பலவீனர்களாக இருப்பவர்கள் மீது மிகுந்த அக்க்றையுடன் செயல்படுமாறு திருத்தந்தை, ஆயர்களைக் கேட்டுள்ளார்.

பாலியல் புகார் விவகாரத்தைக் கையாள்வதில் ஆயரின் நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகள், தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு, உடல், நன்னெறி, ஆன்மீக அல்லது நிதிசார்ந்த கடும் விளைவை ஏற்படுத்தினால், அந்த ஆயர், நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்றும், திருத்தந்தையின் Motu proprio அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.