2016-06-03 15:13:00

திருத்தந்தையின் ஜூன் செபக்கருத்து : மனித ஒருமைப்பாடு


ஜூன்,03,2016. “அருள்பணியாளர் வாழ்வு, பணிபுரிவதிலும், இறைமக்களுக்கு நெருக்கமாக இருப்பதிலும், ஆண்டவர் பற்றிக் கேட்பவர்களின் மகிழ்விலும் நிலைத்திருப்பதாகும்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், நம் நகரங்களில் வயதானவர்களும், நோயாளர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர், இதற்கு நாம் பாராமுகமாய் இருக்கலாமா? என்ற கேள்வியை, ஜூன் மாதச் செபக்கருத்தில் எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் மாதச் செபக்கருத்துச் சிந்தனையை, காணொளிச் செய்தியாக வழங்கியுள்ள திருத்தந்தை, உலகின் மாநகரங்களில்கூட, வயதானவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும், அநாதைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் ஒருமைப்பாட்டுணர்வையும், மனிதரின் சந்திப்புக்களையும் அடைவதற்குச் செபிப்பதற்கு என்னோடு இணைவீர்களா என்று கேட்டுள்ளார்.

இன்னும், இம்மாத நற்செய்தி அறிவிப்பு செபக்கருத்தில், குருத்துவ மாணவர்களும், துறவு வாழ்வில் நுழையும் ஆண்களும் பெண்களும், நற்செய்தியின் மகிழ்வை வாழவும், தங்களின் பணிக்காக ஞானத்தோடு தங்களைத் தயார் செய்யவும் வேண்டுமென்று நாம் எல்லாரும் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.