2016-06-03 14:59:00

அருள்பணியாளரின் இதயம், இயேசுவை,மக்களை மட்டுமே அறிந்துள்ளது


ஜூன்,03,2016. ஓர் அருள்பணியாளரின் இதயம், இயேசுவின் அன்பால் ஊருவப்பட்ட இதயம் என்பதால், அவரது இதயம் தன்னைப் பற்றியே நினைக்காமல், கடவுள் மற்றும் இறைமக்களை நோக்கியே உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், அருள்பணியாளர்களின் யூபிலி விழா நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை, நல்ல ஆயரின் திருஇதயம், அருள்பணியாளரின் இதயம் ஆகிய இரு தலைப்புக்களில் சிந்தனைகளை வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இயேசுவின் திருஇதயம், இறைத்தந்தை மற்றும் நம்மைப் பற்றியதாக இருந்தது என்றும், இயேசுவின் வாழ்நாள்கள், இறைத்தந்தையிடம் செபிப்பது மற்றும் மக்களைச் சந்திப்பதாக இருந்தன என்றும் கூறிய திருத்தந்தை, அருள்பணியாளர்களின் இதயங்களும், இயேசு மற்றும் மக்கள் பற்றியதாக இருக்க வேண்டும் என்றார்.

இயேசுவின் திருஇதயப் பெருவிழாவாகிய இந்நாளின் திருப்பலி வாசகங்கள் பரிந்துரைக்கும், தேடிச் செல்லுதல், எல்லாரையும் இணைத்தல், அகமகிழ்வு ஆகிய மூன்று கூறுகளில் வாழ நம்மைப் பயிற்றுவிப்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நல்ல ஆயர் இயேசுவைப் போன்று, இழந்த ஆட்டைத் தேடிச் செல்வதில், நாளைய தினத்தைப் பற்றியும், நல்ல பெயரையும், வசதி வாழ்வையும் காப்பது பற்றியும் கவலைப்படாமல், எந்தவித விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், ஆபத்துக்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் வாழ்வில் யாரும் அந்நியராக இல்லை, கிறிஸ்துவின் அருள்பணியாளரும் அவ்வாறே வாழ வேண்டுமென்றும், நல்ல ஆயராம் இயேசுவின் மகிழ்வு, தனக்குரியதாக இல்லாமல், பிறருக்காக, பிறரோடு இருந்தது என்றும், இதுவே அருள்பணியாளரின் மகிழ்வும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொரு நாள் திருப்பலியிலும், நல்ல ஆயர்களாக, அருள்பணியாளர்கள், தங்களைக் கண்டுகொள்கின்றனர் என்று மறையுரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் இயேசுவோடு ஒன்றித்து வாழ்வதற்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருப்பதற்கு நன்றியும் தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.