2016-06-01 17:13:00

லூத்தரன் சபையின் 500ம் ஆண்டு விழாவில் திருத்தந்தை


ஜூன்,01,2016. வருகிற அக்டோபர் 31ம் தேதி, சுவீடன் நாட்டின் Lund மற்றும் Malmö நகரங்களில் நடைபெறும், லூத்தரன் சீர்திருத்த கிறிஸ்தவ சபை தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வுகள் குறித்து, உலக லூத்தரன் சபைக் கூட்டமைப்பும், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையும் இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 31ம் தேதி Lund பேராலயத்தில் இடம்பெறும் திருவழிபாட்டிலும், Malmö நகருக்கு அருகிலுள்ள அரங்கில் இடம்பெறும் பொது நிகழ்விலும் திருத்தந்தை கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

லூத்தரன் சபையின் 500ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகளில், கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைக்கு இடையே உரையாடல் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவும் இடம்பெறும்.

இந்த 500ம் ஆண்டு நிறைவு விழாவில், கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் இணைந்து, பொதுவான சாட்சியத்திற்கு அர்ப்பணம், நன்றி, ஒப்புரவு ஆகிய தலைப்புகளில் வழிபாடுகள் நடத்துவார்கள்.

மேலும், அச்சமயத்தில் திருத்தந்தையின் சூவீடன் நாட்டுத் திருத்தூதுப்பயணம் நடைபெறும் என்றும், அதில் ஒரு நிகழ்வாக, நவம்பர் முதல் தேதியன்று காலையில்,   கத்தோலிக்கச் சமூகத்திற்குத் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் திருத்தூதுப்பயணம் பற்றிய பிற விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.