2016-06-01 17:23:00

மனித வர்த்தகர்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிபதிகள்


ஜூன்,01,2016. மனித வர்த்தகம், மாஃபியா குற்றக் கும்பல், போதைப் பொருள் வர்த்தகம், சிறார் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படல், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தவர் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழிகள் குறித்து, உலகளாவிய நீதிபதிகள் இவ்வாரத்தில் வத்திக்கானில் ஆராயவுள்ளனர்.

“மனித வர்த்தகம் மற்றும் திட்டமிட்டக் குற்றம் பற்றிய நீதிபதிகள்” என்ற தலைப்பில், வருகிற வெள்ளி, சனி தினங்களில், திருப்பீட அறிவியல் கழகம் வத்திக்கானில் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.

உலக அளவில், திட்டமிட்டக் குற்றத்தை ஒழிப்பதற்கு, தேசிய மற்றும் பன்னாட்டுச் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகள், இன்னும், இந்தப் பாவ அமைப்புகள் குறித்து இந்த அனைத்துலக மாநாட்டில், நீதிபதிகள் விவாதிக்கவுள்ளனர். இந்நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பதும் உள்ளது.  

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என, உலகின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

மனித வர்த்தகம், போதைப் பொருள் வர்த்தகம், சிறார் பாலியல் தொழில், மனித உறுப்பு வர்த்தகம், கட்டாய வேலை என, நவீன அடிமைமுறைகளுக்கு 4 கோடிப் பேர் பலியாகியுள்ளனர். மேலும், போர், பயங்கரவாதம், காலநிலை மாற்றம் போன்றவைகளால், 6 கோடிப் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 13 கோடிப் பேர் அகதிகளாகியுள்ளனர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.