2016-06-01 17:32:00

புலம்பெயர்ந்தவர் குறித்து சுவிட்சர்லாந்து பல்சமயத் தலைவர்கள்


ஜூன்,01,2016. பெருமெண்ணிக்கையில் மக்கள் புலம்பெயர்வது ஐரோப்பாவுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டுக்கும் பெரிய சவால்களை முன்வைத்துள்ளவேளை, சட்ட முறைப்படி அங்கீகாரம் பெற வேண்டிய தேவையிலுள்ள இம்மக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட வேண்டுமென்று சுவிட்சர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர்கள், பிற கிறிஸ்தவ சபையினர் மற்றும் யூத மதத்தினர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், புலம்பெயர்ந்தவர்களின் பிரச்சனைக்குரிய தீர்வுகள், எளிதானவை அல்ல, ஆயினும், நாட்டின் மனிதாபிமான மரபைப் பின்பற்றி, இம்மக்களுக்கு கருணை காட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்தவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அரசுக்கு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.

இதற்கிடையே, போர் மற்றும் வன்முறை காரணமாக, நாடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறும் மக்களில் பலர், கடல்பயணத்தில் இறப்பது குறித்து கவலைதெரிவித்து, இத்தகைய மக்களுக்குப் புதிய முகாம் ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளார் பாரிஸ் நகர மேயர்.

மேலும், ஆப்ரிக்காவின் கென்யாவில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இயங்கிவந்த, உலகின் பெரிய புலம்பெயர்ந்தவர் முகாமை இன்னும் ஆறு மாதங்களில் மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளது கென்ய அரசு. இதில் ஏறத்தாழ 4 இலட்சம் அகதிகள் உள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.