2016-06-01 16:32:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 1


ஜூன்,01,2016.  அது 1949ம் ஆண்டு டிசம்பர் 21. அன்றுதான் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், கொல்கத்தாவின் பிரபலமான மோத்திஜில் சேரியில் கால் பதித்த முதல் நாள். சேரியில் நுழைந்ததும், அதைச் சுறுசுறுப்பாகச் சுற்றிப் பார்த்தார் அன்னை தெரேசா. ஏனென்றால் அச்சமயத்தில் அன்னை தெரேசாவை யாருக்கும் தெரியாது. அங்கே ஒரு குடிசை காலியாக இருந்தது. இதற்கு வாடகை எவ்வளவு என்று, அங்கிருந்தவர்களைக் கேட்டார் அன்னை தெரேசா. மாதம் ஐந்து ரூபாய் என்றார் குடிசையின் உரிமையாளர். இந்தக் குடிசையை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி, அதில் குடிபுகுந்தார். அச்சமயத்தில் அன்னையிடம் இருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. சேரியில் குடிபுகுந்த அன்றே எல்லாரிடமும் கலகலப்பாகப் பழகினார். நான் இங்கிருந்துகொண்டு, உங்கள் எல்லாருக்கும் சேவையாற்ற வந்துள்ளேன், நீங்கள் என்னை அடிக்கடி உதவிக்குக் கூப்பிட வேண்டும் என்றார் அன்னை தெரேசா. சுற்றி நின்றவர்கள், பயந்துகொண்டே தலையசைத்தனர். அன்னை தனக்கேரியுரிய புன்முறுவலுடன் அச்சேரியில் கிடந்த குப்பை கூளங்களைச் சுத்தம் செய்தார். அன்னையின் அழகையும், நிறத்தையும், தூய்மையான ஆடையையும் பார்த்த அந்தச் சேரி மக்கள், ஒன்றும் புரியாது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அன்று மதிய வேளைக்குள் அன்னையின் அன்பையும், சேவை மனப்பான்மையையும் சேரி மக்கள் புரிந்து கொண்டனர்.

மோத்திஜி சேரியில், குளிக்க அடம்பிடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அன்போடு கூப்பிட்டார் அன்னை தெரேசா. தன்னிடமிருந்த சோப்பால் அவனைத் தேய்த்துக் குளிப்பாட்டி, துவட்டி அனுப்பி வைத்தார். பின்னர், வேறோரு பகுதியில் குடியிருந்த மாநகரத் துப்புரவுத் தொழிலாளர்கள் குடிசைக்குள் அன்னை திடீரென நுழைந்தார். இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டே, ஒரு பெண், புகையும் அடுப்பைச் சிரமப்பட்டு ஊதிக்கொண்டிருந்தார். அத்தாயிடம் குழந்தையைத் தன்னிடம் தரும்படிக் கேட்டார் அன்னை. அப்பெண்ணும் பயந்துகொண்டே கொடுத்தார். பின்னர், புகைந்துகொண்டிருந்த அடுப்பை நன்றாக ஊதி, எரியவைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும், அச்சேரியில், நோயாயிருந்த ஒரு வயதானவரை அன்னைக் கையைப் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த வயதானவர்க்கு, மருந்தும் ரொட்டியும் வாங்கிக்கொடுத்து, சேரிக்குத் திரும்பினார். இதுதான் அருளாளர் அன்னை தெரேசா. இவரைப் புனிதர் என அறிவிக்கும் நாள் வருகிற செப்டம்பர் 4. இந்நாள் வெகுதொலைவில் இல்லை.

அன்னை தெரேசாவை இப்படியெல்லாம் செய்யத் தூண்டியது எது? அவர் இயேசுவின்மீது கொண்டிருந்த பற்று. இயேசுவின் விழுமியங்களை வாழத் துடித்த அவரது அர்ப்பணம். அன்னை வாழ்ந்த கொல்கத்தா நகரம், சிறந்த நினைவுச் சின்னங்களையும், வரலாறு கண்ட கோவில்களையும், எழுச்சிமிக்க இயக்கங்கள் தோன்றிய வரலாறையும் கொண்டிருக்கும் நகரம். அதேநேரம், நகர்ப்புறமாதலின் அடையாளங்களும் இந்நகரில் உண்டு. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தெருவோரத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். நகரின் உட்பகுதிகளில், சகதியும் அழுக்கும் நிறைந்த இடங்களில் ஏராளமானோர் வாழ்கின்றனர். மேற்கு வங்க ஆளுனராகப் பணியாற்றிய ஏ.எல்.டயஸ் அவர்கள், ஒரு சமயம் பெரிய மனிதர்கள் கூட்டத்தில் இப்படிப் பேசினார். நாம் மனிதர்களைப் பன்றிகள் போல் வாழ அனுமதித்துவிட்டு, பின் அவர்கள் மனிதர்கள்போல் நடக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. ஏமாற்றத்தால், அவமானத்தால், அன்பற்ற வாழ்வு தந்த விரக்தியால் வெந்துவிட்ட நெஞ்சங்கள் விட்ட பெருமூச்சுக்கு இறைவன் அனுப்பிய விடியல்தான் அன்னை தெரேசா. தொழுநோயால், வறுமைப் பிணியால், காசநோயால், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டம் நடத்திய மனிதர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் மகிழ்வோடு, இவ்வுலக வாழ்வுக்கு விடை கொடுக்க உதவியவர் அன்னை தெரேசா. நான் கடவுளின் ஒரு சாதாரணக் கருவி என்று அடிக்கடி சொல்வார் அன்னை. தான் நம்பியிருக்கும் இயேசுவே துணை என்று, ஐந்து ரூபாயுடன் தனது புதுவாழ்வைத் தொடங்கியவர் இவர். அதோடு ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது இவர் காட்டிய அன்பே இவரிடம் இருந்த பெரிய சொத்து, பெரிய மூலதனம்.

எல்லா மனிதரிலும் இறைசாயலைக் கண்டவர் அன்னை தெரேசா. இயேசுவை என் வாழ்விலிருந்து அகற்றிவிட்டால் என் வாழ்க்கை சூன்யமே. பசியால் வாடுபவரில் இயேசுவின் சாயலைக் கண்டு அவர்களுக்கு அமுது ஊட்டியவர் இவர். ஆடையின்றி அவமானப்பட்ட ஏழையரில் இயேசுவைப் பார்த்து அவர்களுக்கு ஆடையளித்தவர். குடியிருக்க வீடில்லாமல் வேதனைப்பட்ட இயேசுகளுக்கு புகலிடம் அளித்தவர் அவர். இப்படி சாதி, மத, இன வேறுபாடின்றி எல்லாரிலும் இயேசுவின் சாயலைக் கண்டு பணியாற்றியவர் அன்னை தெரேசா. நான்கே அடி உயரமான இவ்வன்னை, உலகினர் இதயங்களில் மிக உயரிய இடத்தில் இருக்கிறார். சுயநலத்தையும், பணபலத்தையும் நம்பாமல், இறைவனை மட்டுமே நம்பி ஹூப்ளி நதிக்கரையில் வாழ்வைத் தொடங்கியவர்.  வஞ்சிக்கப்பட்டவர் பலர் வாழும் கொல்கத்தாவில், அன்னை தெரேசா ஒரு தனிப்பெரும் வரலாறாக இருந்தார். இந்த வரலாறை இனிவரும் நிகழ்ச்சிகளில் நாம் கேட்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.