2016-06-01 17:49:00

இது இரக்கத்தின் காலம் : ஒவ்வொரு கனவும் நனவாக ஒரு விலை


முன்னாள் பத்திரிகையாளரான 62 வயதாகும் முனைவர் சியாமளா, இந்நாள் ஐம்பத்தைந்து குழந்தைகளின் அம்மா. கடந்த 1995-ம் ஆண்டில் உசிலம்பட்டி, சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களுக்குச் சென்று, அந்த ஊர் மக்களோடு மாதக்கணக்கில் தங்கி, பெண் சிசுக்கொலை குறித்து ஆராய்ந்து, 'தமிழகத்தில் பெண் சிசுக்கொலைகள்' என்ற ஒரு நூலையும் எழுதினார். இந்த நூலுக்கு, தமிழக அரசின் விருதும், அகில இந்திய அளவில் பாராட்டும் பதக்கங்களும் கிடைத்தன. ஆனால், இவை மகிழ்ச்சியளிக்கவில்லை. பெண் சிசுக்கொலைகள் பற்றிச் சிந்தித்தார். எனவே, எழுதுவதை நிறுத்திவிட்டு, தனது தாத்தா-பாட்டியின் பெயரில் சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளையைத் துவங்கினார். குடும்பச் செலவுகளைச் சுருக்கி, அதன் வழியாகக் கிடைக்கும் பணத்தை வைத்து முடிந்தளவு சிசுக்கொலைக்கு ஆளாகாமல் பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, பராமரிப்பது என முடிவு செய்தார். இவரது எண்ணத்தை முறைப்படி நடைமுறைப்படுத்த வாத்சல்யம் அறக்கட்டளை கவுதமன் முன்வந்தார். பராமரிப்பு, படிப்பு, உணவு, உடை கொடுத்து ஐந்து பெண் குழந்தைகளை, தனது பொருளாதார நிலைப்படி வளர்க்கமுடியும் என்று முடிவானதும், பிறக்கும் போதே மரணத்தைத் தழுவ இருந்த ஐந்து பெண் குழந்தைகளை வாத்சல்யம் அறக்கட்டளையின் கீழ் வளர்த்தார். ஓசூரில் உள்ள அந்தக் குழந்தைகளைப் பார்க்க, சென்னையில் இருந்து அடிக்கடி சென்று வந்தார். அம்மா அம்மா என்றழைக்கும் அந்தப் பெண் குழந்தைகளின் அன்பு மழையில் நனைந்தவர், தான் பராமரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே சென்றார். எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல், விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாமல் செயல்படும் முனைவர் சியாமளா, தற்போது 55 குழந்தைகளின் அம்மா. தேன்கனிக்கோட்டையில் இருபது வீடுகளைக் கட்டிவரும் இவர், ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து பெண் குழந்தைகளைக் குடியமர்த்தவுள்ளார். அவர்கள் திருமணமாகி செல்வதுவரை அந்த வீட்டில் சொந்த வீடுபோல இருந்து கொள்ளலாம். ஆம். ஒவ்வொரு கனவும் நனவாக ஒரு விலை இருக்கிறது. முனைவர் சியாமளா, பிர்லா பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் பெல்லோஷிப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் பெண் பத்திரிகையாளர். ஐம்பதாவது வயதில் பிஎச்டி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.