2016-06-01 17:08:00

அர்ஜென்டீனா இளம் எழுத்தாளருக்கு திருத்தந்தை வாழ்த்து


ஜூன்,01,2016. இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், அர்ஜென்டீனா நாட்டு 14 வயது நிரம்பிய இளம் எழுத்தாளரைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற வெள்ளியன்று 14 வயதை எட்டும் அர்ஜென்டீனா நாட்டு இளம் எழுத்தாளர் Veronica Cantero Burroni அவர்கள், திருடரின் நிழல் (Il ladro di ombre) என்ற நூலுக்காக, சிறார் இலக்கியத்தின் Elsa Morante விருதைப் பெற்றுள்ளார்.

பிறப்பில் நரம்பு சேதமடைந்ததால் வெரோனிக்காவின் தசைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தனது எட்டு வயதிலிருந்தே புத்தகங்களை எழுதி வருகிறார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் டுவிட்டர் செய்தியாக, “கிறிஸ்துவின் சீடர்கள் தங்கள் இதயத்தில் ஒளிவுமறைவின்றி இருக்கும்போது, அவர்கள் வாழ்கின்ற மற்றும் பணிசெய்கின்ற இடங்களில் ஆண்டவரின் ஒளியைக் கொண்டு செல்கிறார்கள்” என்ற வார்த்தைகள் வெளியாயின.

இன்னும், இம்மாதம் 13ம் தேதி காலை 9.30 மணிக்கு, WFP என்ற ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட நிறுவனம் சென்று அதிகாரிகளைச் சந்திப்பார் மற்றும் அந்நிறுவனத்தில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மனிதாபிமான நிறுவனம், 78 நாடுகளில், 10 கோடிப் பேருக்கு உதவி வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்திற்குச் சென்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.